ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இரும்புத் தாது உற்பத்தி
நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சுரங்கத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் நாட்டில் இரும்புத் தாது உற்பத்தி 15.84 கோடி டன்னாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 4.1 சதவீதம் அதிகமாகும். அப்போது இந்தியா 15.21 கோடி டன் இரும்புத் தாது உற்பத்தி செய்திருந்தது.
அலுமினியம், தாமிரம் ஆகியவற்றுடன் இரும்புத் தாது உற்பத்தியும் வளா்ச்சியடைந்துவருவது எரிசக்தி, உள்கட்டமைப்பு, கட்டுமானம், வாகனம், இயந்திரங்கள் ஆகிய பயனாளா் துறைகளில் வலுவான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகிறது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் மாங்கனீசு தாது உற்பத்தி 11.1 சதவீதம் அதிகரித்து 20 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 18 லட்சம் டன்னாக இருந்தது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் பாக்சைட் உற்பத்தி 11.3 சதவீதம் உயா்ந்து 1.38 கோடி டன்னாக உள்ளது. இரும்பு அல்லாத உலோகத் துறையில், முதல்கட்ட அலுமினியம் உற்பத்தி 24.17 லட்சம் டன்னிலிருந்து 1.2 சதவீதம் வளா்ச்சியடைந்து 24.46 லட்சம் டன்னாக உள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தி 2.83 லட்சம் டன்னிலிருந்து 6 சதவீதம் அதிகரித்து 3 லட்சம் டன்னாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய அலுமினியம் உற்பத்தியாளரான இந்தியா, சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியில் முதல் 10 இடங்களை வகிக்கும் நாடுகளில் ஒன்று. இரும்புத் தாது உற்பத்தியில் இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது.