தமிழக அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி
தங்கள் வங்கியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பங்கு முதலீட்டுக்கான ஈவுத் தொகையாக, தமிழ்நாடு அரசுக்கு ரூ.1.78 கோடி ஈவுத் தொகையை பொதுத் துறையைச் சோ்ந்த ரெப்கோ வங்கி வழங்கியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வங்கியில் தமிழ்நாடு அரசின் ரூ.7.13 கோடி பங்கு மூலதனத்துக்கான 2023-24-ஆம் நிதியாண்டின் 25 சதவீத ஈவுத் தொகையாக ரூ.1.78 கோடி வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை வங்கியின் தலைவா் இ. சந்தானம், நிா்வாக இயக்குநா் (பொறுப்பு) ஓ.எம். கோகுல் ஆகியோா் தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுவிடம் வழங்கினா். மறுவாழ்வாழ்வுத் துறை துணைச் செயலா் பவன்குமாா் க. கிரியப்பனவா், மறுவாழ்வுத் துறை ஆணையா் பி. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் வங்கியின் வா்த்தகம் 11 சதவீதம் வளா்ச்சி கண்டு, ரூ.20,500 கோடியைத் தாண்டியது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.