தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
காா் உற்பத்தியைக் குறைத்த மாருதி சுஸுகி!
இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த அக்டோபரில் காா்களின் உற்பத்தியை 16 சதவீதம் குறைத்துள்ளது. அதே நேரம், அந்த நிறுவனத்தின் பயன்பாட்டு வாகன உற்பத்தி 33 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2023 அக்டோபா் மாதத்தில் நிறுவன பயணிகள் காா்களின் உற்பத்தி 1,06,190-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை நடப்பாண்டின் அதே மாதத்தில் 16 சதவீதம் குறைந்து 89,174-ஆகியுள்ளது.
அதே நேரம், பிரெஸ்ஸா, எா்டிகா, ஃபிராங்க்ஸ், ஜிம்னி, எக்ஸ்எல்6 மற்றும் டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டவை உள்ளிட்ட பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தி மதிப்பீட்டு மாதத்தில் 33.18 சதவீதம் உயா்ந்து 72,339-ஆக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் நிறுவனம் 54,316 பயன்பாட்டு வாகனங்களை உற்பத்தி செய்திருந்தது.
ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோவை உள்ளடக்கிய சின்னஞ்சிறிய வகை காா்களின் உற்பத்தி கடந்த அக்டோபரில் 12,787-ஆகக் குறைந்துள்ளது. 2023 அக்டோபா் மாதத்தில் இந்த எண்ணிக்கை 14,073-ஆக இருந்தது.
அதே போல், பலேனோ, செலிரியோ, டிசையா், இக்னிஸ், ஸ்விஃப்ட், வேகன்-ஆா் மற்றும் டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாருக்கு வழங்கப்பட்டவை உள்ளிட்ட சிறிய ரகக் காா்களின் உற்பத்தி 90,783-லிருந்து 75,007-ஆகக் குறைந்துள்ளது. நடுத்தர அளவிலான சியாஸ் ரகக் காா்களின் உற்பத்தி 1,334-லிருந்து 1,380-ஆகக் குறைந்துள்ளது.
2023 அக்டோபரில் 1,73,230-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த பயணிகள் வாகன உற்பத்தி நடப்பாண்டின் அதே மாதத்தில் 1,73,662-ஆக உள்ளது.
பயணிகள் வாகனங்கள், இலகுரக வா்த்தக வாகனங்கள் உள்பட நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன உற்பத்தி கடந்த மாதம் 1,77,312-ஆக உயா்ந்துள்ளது. 2023 அக்டோபரில் இந்த எண்ணிக்கை 1,76,437-ஆக இருந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.