ஒரே தொடரில் 1,258 பந்துகள் விளையாடிய புஜாரா..! அணியில் இல்லாததால் மகிழ்ந்த ஆஸி. பந்துவீச்சாளர்!
இந்தியா ஆஸி அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (நவ.22) பெர்த் ஆடுகளத்தில் நடைபெறவிருக்கிறது.
கடந்த சீசனில் ஆஸி.யை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த ரஹானே, புஜாரா இந்தமுறை இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.
ஆஸி.யின் வேகப் பந்து வீச்சாளர்களின் பெரும்பாலான பந்துகளை விளையாடியவர் புஜாராதான்.
2018-19 பார்டர் கவாஸ்கர் தொடரில் 1,258 பந்துகள் விளையாடி 521 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 3 வருடங்களில் 928 பந்துகளில் 271 ரன்கள் எடுத்திருந்தார்.
இது குறித்து ஹேசில்வுட் கூறியதாவது:
புஜாரா அணியில் இல்லாதது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆஸி.க்கு எதிரான எல்லா தொடர்களிலும் புஜாரா சிறப்பாக விளையாடியுள்ளார். நீண்ட நேரம் களத்தில் இருந்து விளையாடும் புஜாராவை ஆட்டமிழக்க வைப்பதற்குள் நாங்கள் மிகவும் களைப்படைந்து விடுவோம்.
ஆனால், அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் வந்திருக்கிறார்கள். பிளேயிங் லெவனில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் நல்ல வீரர்களே.
புஜாராவுக்கு அடுத்து ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடுவார். ரிஷப் பந்துக்கு எதிராக திட்டம் பி,சி என வைத்திருக்க வேண்டும். மாற்று திட்டங்களை வைத்திருப்பது முக்கியம். எங்கள் பக்கமும் போட்டியை விரைவாக மாற்றும் டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இருக்கிறார்கள்.
இந்திய அணியில் உலகத்திலியே சிறந்த பேட்டர்கள் இருக்கிறார்கள். நம்.6வரை சிறப்பாக விளையாடுவார்கள். யார் வந்தாலும் சிறப்பாக விளையாடுவார்கள்.
ஷமியை இந்தியர்கள் மிஸ் செய்வார்கள். 60 போட்டி விளையாடியுள்ளார். மூத்த வீரரும்கூட. இளைஞர்களுக்கு நல்ல உறுதுணையாக இருந்திருப்பார். ஆனால், பும்ரா இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார் என்றார்.