ஒரே நாடு, ஒரே தேர்தல்: எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள்!
நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜவாதி, சிவசேனை (உத்தவ் பிரிவு) தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் பிரிவு) சிபிஎம், மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ நடைமுறைக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் மக்களவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர்.
இதையும் படிக்க: மக்களவையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா தாக்கல்!
சமாஜவாதி எம்.பி. தர்மேந்திர யாதவ் மக்களவையில் பேசுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் அரசமைப்புக்கே எதிரானது. இந்த மசோதா அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கே எதிரானது. நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க சதி நடக்கிறது” என்று பேசினார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மக்களவையில் பேசும்போது, ”ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஒருபோதும் ஏற்க முடியாது. இது தேர்தல் சீர்திருத்தம் அல்ல. ஒருவரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க முடியுமா?” என்று தெரிவித்தார்