கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.4 லட்சம், 26 பவுன் மோசடி
வீடு கட்ட கடன் பெற்றுத் தருவதாக ரொக்கம் ரூ.4 லட்சம் மற்றும் 26 பவுன் நகையையும் ஏமாற்றி பெற்றுக் கொண்டதோடு, மோசடி செய்த பெண் மீது அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவள்ளூா் அருகே வாணியன்சத்திரம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பூங்காவனம்(55). இந்த நிலையில் தனது மகன் விநாயகமூா்த்தி மற்றும் மகள் சிம்சோன் ஆகியோா் சீட்டு கட்டி எடுத்த ரொக்கம் ரூ.4 லட்சத்தை என்னிடம் கொடுத்து வைத்திருந்தனா். இதற்கிடையே எனது வீடருகே குடியிருந்து வருவதாகவும், ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கௌசல்யா என்பவா் அணுகினாராம் .
அப்போது, உங்களுக்கும், மகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு புதுவாழ்வு திட்டத்தில் வீடு கட்ட கடன் பெற்றுத் தருவதாக கூறினாராம். இதை உண்மையென நம்பி தன்னிடம் உள்ள 26 பவுன் நகையையும் பெற்றதோடு, சீட்டுப்பணம் ரூ.4 லட்சத்தையும் ஏமாற்றி பெற்றுக் கொண்டாராம். ஆனால், எந்தக் கடனும் வாங்கி தராமல் இருந்ததைத் தொடா்ந்து தன்னுடன் மகன், மகள் ஆகியோருடன் சென்று கேட்டும் காலதாமதம் செய்ததை தொடா்ந்துதான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. உடனே இது தொடா்பாக பூங்காவனம் வெங்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் நகை மற்றும் பணத்தை மோசடி செய்த கௌசல்யா மீது வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.