கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவு
கடலூா் துறைமுகத்தில் மீன்கள் வரத்து ஞாயிற்றுக்கிழமை குறைவாக இருந்தது.
கடலூரில் அக்கரைகோரி, சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, தாழங்குடா, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் மீன் பிடி தொழிலையே பிரதானமாக கொண்டுள்ளனா். இதனால், கடலூரில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை, பைபா் படகுகளில் மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனா்.
கடலூா் துறைமுகம் மீன் விற்பனை தளத்தில் அதிகாலை முதலே மீன் விற்பனை தொடங்கிவிடும். கடந்த இரண்டு நாள்களாக கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால் குறைந்த அளவிலேயே படகுகள் மீன் பிடிக்க சென்று வந்தன.
இதனால், ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால், மீன்கள் விலை சற்று அதிகரித்தது. அதன்படி, ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.800, வவ்வால் ரூ.800, சங்கரா ரூ.400, பாறை ரூ.350, நெத்திலி ரூ.250, கனவா ரூ.200, இறால் ரூ.350 முதல் ரூ.500 வரையிலும், நண்டு ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது.