கடைசி டி20: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹோபர்ட்டில் இன்று (நவம்பர் 18) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
117 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பாபர் அசாம் 41 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஹசிபுல்லா கான் 24 ரன்களும், ஷாகின் அஃப்ரிடி 16 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நான் கவனமாக இருக்க வேண்டும்: மூத்த ஆஸி. வீரர்
ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆடம் ஸாம்பா மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளையும், சேவியர் பார்ட்லெட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தொடரை முழுமையாக வென்ற ஆஸ்திரேலியா
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களின் முடிவில் இலக்கை எட்டி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜோஷ் இங்லிஷ் 27 ரன்களும், ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் 18 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அஃப்ரிடி, ஜஹகன்தாத் கான் மற்றும் அப்பாஸ் அஃப்ரிடி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: திலக் வர்மாவுக்கு 3-வது இடத்தை விட்டுக்கொடுக்கிறாரா சூர்யகுமார் யாதவ்?
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆட்ட நாயகனாகவும், ஸ்பென்சர் ஜான்சன் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.