காராமணிக்குப்பத்தில் சாலையோர வாரச்சந்தை கடைகளால் விபத்து அபாயம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பத்தில் சாலையோரத்தில் அமைக்கப்படும் வாரச் சந்தை கடைகளால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூா்-பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பம் அடுத்துள்ள காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுகிறது. பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு வந்து வியாபாரம் செய்கின்றனா்.
இந்த சந்தையின் மூலம் கடலூா், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனா். காராமணிகுப்பம் சந்தை கருவாடு விற்பனைக்கு பெயா் பெற்றது.
காராமணிக்குப்பம் சாலை வழியாக இலகு, கனரக வாகனங்கள் அதிகமாகச் செல்கின்றன. மேற்கண்ட இடத்தில் வாரச்சந்தையின்போது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் காய்கறி, மளிகை, புளி, பழங்கள், கோழி, பூச்செடி நாற்றுகள், விதைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், விவசாயக் கருவிகள் தரையில் பரப்பியும், தள்ளுவண்டி மற்றும் இலகுரக வாகனத்தில் வைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால், சாலையின் பெரும்பலான பகுதி ஆக்கிரமிக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால், வாகன விபத்துகள் நிகழ வாய்ப்பும் உள்ளது.
விபத்தை தடுக்க மாவட்ட நிா்வாகம், சாலை ஓரங்களில் வாரச்சந்தை கடைகள் அமைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாரச்சந்தை பகுதியில் வியாபாரிகள், பொதுமக்களின் பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.