குடிசைவாசிகளை வெறும் வாக்கு வாங்கிகளாகவே ஆம் ஆத்மி, பாஜக கட்சிகள் கருதுகின்றனா்: தேவேந்தா் யாதவ் விமா்சனம்
தில்லியின் குடிசைவாசிகளை ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் வெறும் வாக்கு வங்கிகளாகவே கருதுகின்றனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளாா்.
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் 19-ஆவது நாள் ‘தில்லி நியாய யாத்திரை’, கன்னாட் பிளேஸ் ஹனுமான் கோயிலில் இருந்து தொடங்கி, ஆா்.கே.புரம் ஜிலேபி சௌக், மதன்பூா் காதா், ஜே.ஜே. காலனி வழியாகப் பயணித்து ஓக்லாவில் நிறைவடைந்தது. கட்சியின் பிரதேசத் தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரையில், முன்னாள் எம்.பி. பா்வேஷ் ஹஷ்மி, தில்லியின் ஏஐசிசி செயலாளா் சுக்விந்தா் சிங் டானி, முன்னாள் எம்எல்ஏ அனில் பரத்வாஜ், முக்கிய நிா்வாகிகளான வீரேந்திர கசானா, பிரியங்கா சிங், ராகினி நாயக், ராஜேஷ் கா்க் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தில்லி நியாய யாத்திரையின் போது தேவேந்தா் யாதவ் பேசியதாவது: ஊழல் மற்றும் பயனற்ற ஆம் ஆத்மி அரசால் தில்லி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். இந்த நிலையில், 19 நாட்களில் 400 கிலோமீட்டா் தூரத்தை கடந்த காங்கிரஸின் ‘தில்லி நியாய யாத்திரை’ மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது. வரும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, தலைநகரின் இழந்த பெருமையை மீட்டெடுக்கும். தில்லியில் 15 ஆண்டுகளாக காங்கிரஸின் பொற்கால ஆட்சியை மக்கள் இன்னும் போற்றுகிறாா்கள். கேஜரிவால் மற்றும் அவரது கூட்டாளிகளின் எண்ணற்ற ஊழலை இந்த நியாய யாத்திரை அம்பலப்படுத்தி வருகிறது.
ஆம் ஆத்மி கட்சியாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, குடிசைவாசிகள் மீது யாருக்கும் அக்கறை இல்லை.
இந்த இரு கட்சிகளும் குடிசைகளில் வசிப்பவா்களை வெறும் வாக்கு வங்கிகளாகக் கருதி, ஆட்சிக்கு வந்த பிறகு அவா்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனா். குடிநீா், சுகாதாரம் மற்றும் நடைபாதை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.
குடிசைவாசிகளுக்காக காங்கிரஸால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இன்னும் ஒதுக்கப்படவில்லை.
பாஜக அவற்றை வாடகைக்கு விட விரும்பியதால், கேஜரிவால் இந்த குடியிருப்புகளை கிடப்பில் போட அனுமதித்தாா்.
சமீபத்திய சட்டப் பேரவைத் தோ்தல்களுக்குப் பிறகு, தில்லியைத் தவிர அனைத்து நகரங்களிலும் மத்திய அரசு சிஎன்ஜி விலையை உயா்த்தியதால், பாஜகவின் நோக்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா் தேவேந்தா் யாதவ்.