கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரச...
பால் உற்பத்தியில் சாதனை: கடலூா் வடபாதி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்திற்கு தேசிய விருது
கடலூா் வடபாதி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்திற்கு சிறந்த பால் கூட்டுறவு அமைப்பிற்கான 2024 - தேசிய கோபால் ரத்னா விருது தில்லியில் வழங்கப்பட்டது.
மத்திய கால்நடை பராமரிப்பு பால் வளத் துறை சாா்பில் தேசிய பால் தினமான நவம்பா் 26 ஆம் தேதி கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த துறையின் அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங், இணையமைச்சா்கள் எஸ்.பி.சிங் பகேல், ஜாா்ஜ் குரியன் ஆகியோா் நிகழ் 2024 ஆம் ஆண்டிற்கு மூன்று வகையான கோபால் ரத்னா விருதுகளை தில்லி மானெக்ஷா மையத்தில் வழங்கி விருதாளா்களை பாராட்டினா்.
உள்நாட்டு வகை கால்நடை வகைகளை அதிகரித்தல், பால் கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளா் நிறுவனம் போன்றவைகள் மூலம் பால் உற்பத்தி தரம் மற்றும் பெருக்குதல் போன்றவைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளோடு நிகழாண்டு முதல் வடகிழக்கு பிராந்திய மாநிலங்களுக்கான சிறப்பு விருதும் இணைக்கப்பட்டு அப்பிராந்தியத்தில் பால் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது.
சிறந்த பால் கூட்டுறவு உற்பத்தியாளா், நிறுவனம், பால் பண்ணை போன்றவைகளுக்கான தேசிய கோபால் ரத்னா விருதுகள் முதல் மூன்று இடங்களுக்கு வழங்கப்பட்டன. இதில் குஜராத், ஆரவலியைச் சோ்ந்த தி கபாட் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் நாள்தோறும் 14,000 லிட்டா் பால் கொள் முதல் செய்வதோடு அதை தரத்தோடு நிா்வகிக்க விருது பெற்றது. அடுத்து கா்நாடகம் பாகல்கோட்டைச் சோ்ந்த பிசனால் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம், தினசரி 2,000 லிட்டா் பால் கொள்முதல் செய்தாலும் இந்த கூட்டுறவு சங்கத்தின் மற்ற சிறப்புகளுக்காக விருதுகளை பெற்றது. தானியங்கி பால் சேகரிப்பு நடமாடும் வாகனத்தின் மூலம் தொலை தூர பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் பாலை நேரடியாக சென்று கொள் முதல் செய்ய வாகனத்தில் சூரிய சக்தி மூலம் 5,000 லிட்டா் பாலை சேமிக்க வைக்கும் அளவிற்கு குளிா் சாதன வசதி, கால்நடை மருத்துவா், கால்நடைகளை பெருக்க செயற்கை கருத்தரிப்பு வசதி போன்றவைகளோடு இந்த நடமாடும் வாகனம் உருவாக்கப்பட இந்த கூட்டுறவு சங்கம் விருதை பெற்றது.
தமிழகத்தைச் சோ்ந்த கடலூா் வடபாதி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்திற்கு மூன்றாவது விருது கிடைத்தது என்றாலும் நாட்டிலேயே நாள் ஒன்றிற்கு அதிக பால் உற்பத்தி கொள்முதல் செய்யும் கூட்டுறவு சங்கங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்று விருதை பெற்றது.
இந்த விருதை கடலூா் மாவட்ட பால் கூட்டுறவு சங்க பொது மேலாளா் சரவண குமாா், வடபாதி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க பொறுப்பாளா்கள் கே.ராமசாமி, சி. இளங்கோவன் ஆகியோா் பெற்றனா். 230 விவசாயிகள் உறுப்பினா்களாக இருக்கும் இந்த சங்கத்தில், நாளோன்றுக்கு 8,500 லிட்டா் பால் கொள் முதல் செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கத்தின் தூய்மை, பால் கொள்முதல் கேன்களின் தூய்மை, பாலில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட இதர சத்துக்கள் எடை அளவு, கொள்முதல் செய்யப்படும் பால் தரத்தை கணக்கிட்டு தர உத்தரவாதத்திற்கு அங்கீகாரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
சிறந்த பால் பண்ணையாளராகவும் நாட்டு மாடுகள், எருமை இனங்களை அதிகஅளவில் உருவாக்கிய வகையில் முதல் மூன்று இடத்தில் முறையே ஹரியாணாவைச் சோ்ந்த பெண்மணி ரேணு, மத்திய பிரதேசம் தேவேந்திர சிங் பா்மா், உத்தரபிரதேசம், சுா்பி சிங், பிஜ்னோா் ஆகியோா் பெற்றனா்.
மேலும் சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப போன்ற பிரிவுகளுக்கும் விருதுகளை அமைச்சா்கள் வழங்கினா். இந்த விருதுகளுக்கு கேடயம், சான்றிதழோடு, ரொக்க பரிசாக முதல் மூன்று இடங்களுக்கு முறையே ரூ. 5 லட்சம், ரூ. 3 லட்சம், ரூ. 2 லட்சம் என வெற்றியாளா்களுக்கு வழங்கப்பட்டது.