கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரசு தகவல்
கடன் வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் அடுத்த மூன்று- நான்கு மாதங்களில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று மத்திய நிதிச்சேவை செயலாளர் எம்.நாகராஜு தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடத்திய உச்சிமாநாட்டில் அவர் பேசியதாவது:
நம் நாட்டில் இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
அனைத்து துறைகளுக்கும் கடன் வழங்குவதை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் அடுத்த மூன்று - நான்கு மாதங்களில் புதிய திட்டங்களை அமல்படுத்த உள்ளன.
சிறிய அளவிலான கடன்களை வாங்குபவர்களுக்கு கடன் கிடைப்பதை மேம்படுத்த மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
டிஜிட்டல் மோசடிகள், நிதித்துறை ஸ்திரத்தன்மைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. இந்த சவாலை சமாளிக்க வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட வங்கித்துறை திருத்த மசோதா, நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற வாய்ப்புள்ளது. வங்கிகளுக்கான ஒழுங்குமுறைகளில் திருத்தங்களைக் கொண்டுவருவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்குவதில் உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. தொழில்-வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நிதிச்சேவை நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம் ஆகியவை இத்துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் தலைவர் ஷாஜி கே.வி. பேசுகையில் "நமது கிராமப்புற பொருளாதாரத்தில் தொழில்நுட்ப மாற்றங்களை ஜனநாயக ரீதியில் கொண்டுவர வேண்டியது அவசியம்' என்றார்.