பொது வாழ்வில் உள்ளவர் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும்: சி.வி.சண்முகத்துக்கு எதிரான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம்
நமது நிருபர்
"பொது வாழ்வில் உள்ளவர் நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்' என்று மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தரக்குறைவாக விமர்சித்ததாக தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சுதான்ஷு துலியா, அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த விவகாரத்தில் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா ஆஜாராகி வாதிட உள்ளார். ஆனால், சில தனிப்பட்ட காரணத்துக்காக அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. எனவே, வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதேபோன்று, சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பாலாஜி சீனிவாசன், இந்த வழக்கில் மனுதாரர் தரப்புக்காக மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராக உள்ளார்.
அவர், தற்போது வேறு வழக்கில் உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஆனால், மனுதாரர் தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், "இந்த வழக்கில் நீங்களே வாதிடுங்கள், மேலும் இந்த வழக்கில் விசாரிக்க ஒன்றும் இல்லை' எனத் தெரிவித்தனர். மேலும், "பொது வாழ்வில் இருக்கும் ஒருவர் விமர்சனம் வைக்கும்போது நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு மாநில முதல்வரை தரம்தாழ்த்திப் பேசும்போது அவதூறு வழக்கு பதிவு செய்யப்படுவது இயல்புதானே. எனவே, அந்த வழக்கை அவர் சந்திக்கட்டும்' எனத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தரப்புக்காக ஆஜரான மூத்த வழக்குரை முகுல் ரோத்தகி, "ஒரு தவறான விஷயத்தை அரசு செய்யும்போது, அதை எதிர்க்கட்சியின் பிரதான தலைவர் என்ற முறையில் விமர்சிப்பது இயல்புதான். ஓர் அரசின் தலைவராக இருப்பவர் முதல்வர்.
எனவே, அரசு எடுக்கும் முடிவுகளுக்காக முதல்வரை விமர்சனம் செய்வது இயல்பான ஒன்று. விமர்சனங்களுக்காக வழக்கு பதிந்தால் தொடர்ந்து அவதூறு வழக்குகள் பதிவு செய்துகொண்டேதான் இருக்க வேண்டும். எனவே, இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரினார்.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அமித் ஆனந்த் திவாரி, ஒரு முதல்வரை ஒருமையில் பேசுவது மற்றும் மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவது அவதூறுதான். அதனடிப்படையில் வழக்கு பதியப்பட்டது.
எனவே, சம்பந்தப்பட்ட நபர் வழக்கைச் சந்திக்க வேண்டும். எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது என வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தும், சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்ய விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.