நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சுவாரஸ்ய நிமிஷங்கள்...
அரசமைப்பு தினத்தையொட்டி பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மைய மண்டபத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றும் முன்பு மைய மண்டபத்தில் சுவாரஸ்யமான சில சந்திப்புகளைக் காண முடிந்தது.
புதிய உறவு மலருமா?: மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் மு. தம்பிதுரை மைய மண்டபத்துக்குள் நுழைந்தபோது அங்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் அமரும் பகுதியின் முன்வரிசையில் இருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டு கொள்ளாமல் சென்றது பலராலும் கவனிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் அமரும் இடதுபுற மூன்றாம் பகுதியில் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்த அவர், தனக்கு முன்பும் பின்புமாக திமுக உறுப்பினர்கள் சிலர் இருந்ததைக் கண்டு இடம் மாறி இரண்டாவது பகுதியின் இரண்டாம் வரிசையில் அருகருகே அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கர்கேக்கு பின் வரிசையில் அமர்ந்தார்.
ராகுலையும் கார்கேவையும் அழைத்து வணக்கம் தெரிவித்த தம்பிதுரையிடம் இரு தலைவர்களும் தொடர்ச்சியாக சில கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு எழுந்து நின்றவாறு தம்பிதுரை பதிலளித்தார். அவர் பேசி முடிக்கும் வரை, 3,4,5-ஆம் பகுதியில் அமர்ந்திருந்த திமுக எம்.பி.க்கள் பலரும் ராகுலுடன் தம்பிதுரை பேசுவதையே உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
தந்தையும் மகனும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மிகவும் அமைதியாக அவையின் இடமிருந்து மூன்றாம் பகுதியில் தனியாக அமர்ந்து குடியரசுத் தலைவரின் உரையைக் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார். அவரது மகனும் திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ, தனது இடது கையில் மதிமுக கொடியைக் கட்டியபடி வந்திருந்தார். தனது வயதை ஒத்த எம்.பி.க்களுடன் கலந்துரையாடிய அவர், மயிலாடுதுறை காங்கிரஸின் முதல் முறை எம்.பி. சுதா அருகே அமர்ந்து அவை நிகழ்வுகளை பார்வையிட்டார்.
அசத்திய தேவெகௌடா: வயது மூப்பு காரணமாக முன்னாள் பிரதமரும் மூத்த உறுப்பினருமான தேவெகௌடா சக்கர நாற்காலியில் மைய மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆளும் கட்சித் தலைவர்கள் அமரும் பகுதியின் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டார். கடைசிவரை நிகழ்வைப் பார்வையிட்ட அவர், கூட்டம் முடிந்ததும் தன்னை சந்தித்த ஒவ்வொரு உறுப்பினரின் பெயரையும் நினைவுபடுத்தி சிலரது பெயர்களை சரியாக உச்சரித்து அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தார்.
குடியரசுத் தலைவர் உரையில் தவிர்க்கப்பட்ட "சோசலிஸ்ட்', "மதச்சார்பற்ற' வார்த்தைகள்: டி.ஆர். பாலு குற்றச்சாட்டு
இந்திய அரசமைப்புச் சட்ட தினத்தின் 75-ஆவது ஆண்டு விழாவையொட்டி நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்கள் இடையே செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையில் சோசலிஸ்ட், மதச்சார்பற்ற ஆகிய வார்த்தைகள் குறிப்பிடப்படவில்லை என்று மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு டி.ஆர். பாலு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தேசத்தின் அனைத்து குடிமக்களுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் மதிப்புகளை பரப்பும் நோக்கத்துடன் ஆற்றப்படும் குடியரசுத் தலைவரின் உரையானது தனித்துவமான மற்றும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்த உரையின் அம்சங்களை அனைத்து குடிமக்களும் புரிந்து கொள்வர்.
மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள குடியரசுத் தலைவரின் உரையில் அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய கூறுகளான சோசலிஸ, மதச்சார்பற்ற ஆகிய வார்த்தைகள் குறிப்பிடப்படாததை அறிஞர்களும் பொதுமக்களும் பரவலாக சுட்டிக்காட்டுகின்றனர்.
குடியரசுத் தலைவரின் உரையை தெளிவுபடுத்தும் விதமாக அதன் மீது விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்பது நாடாளுமன்றத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நடைமுறை.
எனவே, மக்களவையின் கூட்டத்தொடர் அமர்விலேயே குடியரசுத் தலைவரின் உரை குறித்து விவாதிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.