தமிழகத்துக்கு பேரிடர் நிதி ரூ.50 கோடி: மத்திய அரசு ஒப்புதல்
நமது சிறப்பு நிருபர்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு நிலச்சரிவால் ஏற்படும் ஆபத்து தணிப்புகளுக்காக ரூ. 1,000 கோடியை முன்மொழிந்து ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படுகிறது.
இந்தத் தொகை தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து (என்டிஎம்எஃப் ) வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமர் மோடியின் "பேரிடர் தாங்குதிறன் இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற, மத்திய உள்துறை அமைச்சகம் நாட்டில் பேரழிவுகளை திறம்பட நிர்வகிப்பதை உறுதி செய்ய பல முயற்சிகளை எடுத்துவருகிறது. நாட்டின் பேரிடர் அபாயக் குறைப்பு முறையை வலுப்படுத்தவும், இந்த காலகட்டங்களில் மக்களின் உயிர், உடைமைகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளாக கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழுவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் செüஹான், நீதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு செவ்வாய்க்கிழமை கூடி, 15 மாநிலங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயத்தைத் தணிப்பதற்கான முன்மொழிவுக்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து ரூ.1,000 கோடி நிதியுதவி அளிப்பதற்கு ஒப்புதல் வழங்கியது.
மேலும், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கு குடிமைப் பாதுகாப்பு பயிற்சி, தயார்நிலை, திறன் கட்டமைப்பின் கீழ் பயிற்சி, திறன் வளர்ப்புக்காக ரூ.115.67 கோடியையும் முன்மொழிந்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தின்கீழ் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் எட்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 378 கோடி, ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் ஆகியவற்றுக்கு தலா ரூ. 139 கோடி, மகாராஷ்டிரத்துக்கு ரூ.100 கோடி, கர்நாடகம், கேரள மாநிலங்களுக்கு தலா ரூ. 72 கோடி, தமிழகம், மேற்கு வங்கத்துக்கு தலா ரூ. 50 கோடி என 15 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் தேசிய நிலச்சரிவு ஏற்படும் அபாய தணிப்புத் திட்டத்துக்கு உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.