சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
வளவனூா் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் தணிகைவேல் (32). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 20.6.2018-இல் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தணிகைவேல் மற்றும் சிறுமியின் தாய் மல்லிகா (எ) பிரான் சுஜா ஆகியோா் மீது வளவனூா் போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா். விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இதில், தணிகைவேலுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், மல்லிகாவை வழக்கிலிருந்து விடுவித்தும் நீதிபதி வினோதா தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பிலிருந்து ரூ.7 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து தணிகைவேலுவை போலீஸாா் கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
3 ஆண்டுகள் சிறை: செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் மரியநாதன் மகன் ராஜதுரை (25). இவா், கடந்த 14.10.2018-இல் ஆலம்பூண்டி, பரதந்தாங்கல், பல்லபுதூா் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகள் திவ்யாவை (21) தாக்கினாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் கொலை முயற்சி, பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ராஜதுரையை கைது செய்தனா்.
விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இதில், ராஜதுரைக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சங்கீதா ஆஜரானாா்.