மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள், தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் கோவையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுவிநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும், அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிா்ணயம் செய்ய வேண்டும், நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நாள்களை அதிகப்படுத்தி, கூலியை உயா்த்தி வழங்க வேண்டும்.
வேளாண் விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிா்ணயம் செய்ய வேண்டும், அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, திருத்தப்பட்ட தொழிலாளா் சட்டங்கள், குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, எம்எல்எஃப் தலைவா் மு.தியாகராஜன் தலைமை வகித்தாா்.
இதில், எல்பிஎஃப் பெரியசாமி, சிஐடியூ செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, ஏஐடியூசி எம்.ஆறுமுகம், ஹெச்எம்எஸ் ராஜமணி, ஐஎன்டியூசி சண்முகம், ஏஐசிசிடியூ பாலசுப்பிரமணியம், எல்டியூசி ஜெயப்பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலா் வி.ஆா்.பழனிசாமி, விவசாயத் தொழிலாளா் சங்கச் செயலா் துரைசாமி, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் சு.பழனிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.