ஆசிரியா் பணி நியமனத்துக்கு லஞ்சம்: அலுவலக உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை
ஆசிரியா் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய தொடக்கக் கல்வித் துறை அலுவலக உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்ட தொடக்கக் கல்வித் துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தவா் கே.பாலச்சந்திரன். இவா், ஸ்டெல்லா மேரி என்ற ஆசிரியையிடம் பணி நியமனத்துக்காக கடந்த கடந்த 2019 இல் ரூ.20,000 லஞ்சம் பெறும்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள லஞ்ச ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி எஸ்.மோகனரம்யா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில், தற்போது திருப்பூா் மாவட்ட தொடக்கக் கல்வித் துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வரும் கே.பாலச்சந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தும் உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஜா் சிவகுமாா் ஆஜரானாா்.