கேப்டன் இல்லாமல் செயல்படும் பிக் பாஸ் வீடு! முத்துக்குமரன் காரணமா?
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 12வது வாரம் முழுக்க கேப்டன் இல்லாமல் செயல்படவுள்ளது.
கடந்த வாரத்தில் கேப்டனை தேர்வு செய்வதற்கு நடைபெற்ற போட்டியில் ஜெஃப்ரியை வீழ்த்திய முத்துக்குமரன், பவித்ராவுக்கு விட்டுக்கொடுத்ததால் கேப்டனை தேர்வு செய்யும் போட்டியை பிக் பாஸ் ரத்து செய்தார்.
தான் வேண்டுமென்றே விட்டுக்கொடுக்கவில்லை என்றும், தற்செயலாக நிகழ்ந்தது எனவும் முத்துக்குமரன் அழுதவாறு விளக்கம் கொடுத்து மன்னிப்பு கோரினார்.
எனினும் பிக் பாஸ் இதற்கு செவி சாய்க்காமல் தனது முடிவில் உறுதியாக இருந்து, கேப்டன் இல்லாமல் இந்த வாரத்தை செயல்பட வைத்துள்ளார்.
விட்டுக்கொடுத்தாரா முத்துக்குமரன்?
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதால், போட்டியாளர்கள் கவனத்துடன் விளையாடி வருகின்றனர்.
11வது வார முடிவில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக ரஞ்சித் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து 12வது வாரம் இன்றுமுதல் தொடங்கியுள்ளது.
வாரத்தின் முதல் நாள் கேப்டன் பொறுப்பேற்பது வழக்கம். ஆனால் கடந்த வாரத்தில் கேப்டன் பொறுப்பேற்கத் தேர்வான ஜெஃப்ரி, முத்துக்குமரன், பவித்ரா ஆகிய மூவருக்கு பிக் பாஸ் போட்டி வைத்தார்.
இப்போட்டியில் வெற்றிபெறும் நபர் 12வது வாரத்தின் கேப்டனாக செயல்படுவார். போட்டியில் ஜெஃப்ரியை வீழ்த்திய முத்துக்குமரன், பவித்ரா கேப்டனாவதற்காக போட்டியை விட்டுக்கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிக்க | இன்றுமுதல் ஒளிபரப்பாகிறது எதிர்நீச்சல் -2 தொடர்!
பிக் பாஸ் அதிருப்தி
பிக் பாஸ் போட்டியை மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொள்ளாமல், இரண்டாம்பட்சமாக நினைத்து விளையாடியதால், கேப்டன் போட்டியையே பிக் பாஸ் ரத்து செய்தார். அதோடு நாமினேஷன் ஃபிரி பாஸ் கூட இனிமே இருக்காது என எச்சரித்தார்.
பிக் பாஸின் இந்த முடிவு சக போட்டியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த முத்துக்குமரன் கண்ணீர் விட்டு மன்னிப்பு கோரினார். தீபக், வி.ஜே. விஷால், ஜாக்குலின் உள்ளிட்டோர் முத்துக்குமரனுக்கு ஆறுதல் கூறினர். எனினும் பிக் பாஸ் செவிசாய்க்கவில்லை.
இதனால் 12வது வாரத்தில் கேப்டன் இல்லாமல் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். சமைப்பதற்கு, வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு தாங்களே ஆள்களை தேர்வு செய்து விளையாடி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கேப்டன் இல்லாமல் போட்டியாளர்கள் விளையாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: புதிய சாதனை படைத்த ஜாக்குலின்!