'கொதித்த வானதி... காட்டமான ஹெச்.ராஜா..!' - பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?
கடந்த 2.9.2024 முதல் தமிழக பா.ஜ.க-வில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. ஒரு கோடி பேரை இணைக்க வேண்டும் என டெல்லி டார்கெட் கொடுத்திருந்த நிலையில், 20 லட்சம் பேர்தான் இணைத்துள்ளனர் என்கிறார்கள். மாநிலம் முழுவதும் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா சுற்றுப்பயணம் மேற்கொண்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே இதற்கான காரணம் குறித்து விவாதிப்பதற்காக மையக்குழு கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்தனர்.
அதன்படி 20.11.2024 அன்று சென்னை, தி.நகரில் இருக்கும் பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், "முதலில் பேசத் தொடங்கிய அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர், `செப்டம்பர் மாதத்திலிருந்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறோம். ஆனால் தேசிய தலைமை கொடுத்த ஒரு கோடி இலக்கை நம்மால் அடைய முடியவில்லை. சில இடங்களில் பூத் கமிட்டி கூட அமைக்க முடியாத நிலையில் இருக்கிறோம்" என்றனர். இதற்குப் பதிலளித்த தலைவர்கள், "உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரமாக நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.
சிறுபான்மையின மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் பா.ஜ.க-வில் இணைவதற்கு ஆர்வம் இல்லை. எனவேதான் அந்த இடங்களில் பூத் கமிட்டி அமைக்க முடியவில்லை" என்றனர்.
அப்போது குறுக்கிட்ட தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், "இதுபோன்ற பிரச்னைகளுக்கெல்லாம் மாவட்ட தலைவர்கள்தான் காரணம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட சொதப்பிவிட்டனர். பல இடங்களில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. எனவே கட்சி பணிகளில் ஆர்வம் காட்டாத மாவட்ட தலைவர்களை உடனடியாக நீக்க வேண்டும்" எனக் கொதித்தார்.
அதற்குத் தலைவர்கள் சிலர், "தேர்தல் தோல்விக்கு அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்காததும் ஒரு காரணம். கூட்டணி வைத்திருந்தால் வெற்றிபெற்றிருப்போம். இதன் மூலமாக தி.மு.க வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை நாமே ஏற்படுத்திக்கொடுத்துவிட்டோம்" என்றனர்.
இதையெல்லாம் கவனமாகக் கேட்ட அரவிந்த் மேனன், "தற்போதைக்கு அ.தி.மு.க குறித்து அதிகம் விமர்சனம் செய்ய வேண்டாம். அப்படியே விமர்சனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால் கூட தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம். தேர்தல் நேரத்தில் தேசிய தலைமை வழங்கும் ஆலோசனையின்படி கூட்டணி அமையும்" என்றார்.
இதற்கு மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், "தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் தமிழகம் திரும்புகிறார். அவர் வந்த பிறகு கூட்டணி குறித்தெல்லாம் பேசிக்கொள்ளலாம். அதுதான் சரியாக இருக்கும்" என்றிருக்கிறார்.
கூட்டத்தின் முக்கிய கரு விலகி போவதாக எதிர்வினை ஆற்றிய ஹெச்.ராஜா, "மாநில தலைவர் வரும்போது வரட்டும். கூட்டணி குறித்து இப்போது யாரும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கொஞ்சம் அமைதியாக இருங்கள்" எனக் காட்டமாகவே பேசினார். அவருடன் சேர்ந்து மற்ற தலைவர்களும் வெடிக்க, சூழல் அங்கு சூடானது. சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் அண்ணாமலைக்கு எப்படி வரவேற்பு கொடுக்கலாம் என மீண்டும் கேட்டிருக்கிறார்.
மீண்டும் கூட்டம் திசை மாறுவதாக தமிழிசை, வானதியும் கூட்டம் நிறைவடைவதற்கு முன்பே வெளியேறிவிட்டார்கள். பிறகு நிலைமையைப் புரிந்து கொண்ட தலைவர்கள் விஜய் பக்கம் பேச்சைத் திருப்பியிருக்கிறார்கள். சிலர், "சமீபத்தில் நடந்த த.வெ.க மாநாட்டில், 'நம்மை பிளவுவாத கட்சி என விஜய் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்திலும் கூட ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது அரசியலுக்கு வந்தவர் நம்மை பிளவுவாத கட்சி என விமர்சனம் செய்வதா?" எனக் கோபப்பட்டிருக்கிறார்கள்.
இதற்குப் பதிலளித்த சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன் உள்ளிட்டோர், "மாநாட்டில் நேரடியாக பா.ஜ.க என விஜய் எங்கும் குறிப்பிடவில்லை. நம்மை நேரடியாகத் தாக்கி அவர் பேசட்டும். அதன்பிறகு நாம் விமர்சனம் செய்யலாம். அதுவரை விஜய் குறித்தும் அதிகம் தாக்கி பேச வேண்டாம். நாம் விமர்சனம் செய்ய வேண்டியது தி.மு.க மட்டும்தான். அதேநேரத்தில் பிரதமர் மோடி கொண்டுவந்த திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்லுங்கள். அமைப்பு தேர்தல்களை எவ்விதமான பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக நடத்தி முடிக்க வேண்டும்" என ஆலோசனை கொடுத்ததுடன் கூட்டம் நிறைவடைந்தது.
ஆனால் இந்த கூட்டம் உறுப்பினர் சேர்க்கை மந்தமாக இருப்பதற்கான காரணம் குறித்தும், அதை எப்படிச் சரி செய்யலாம் என்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கும்தான் கூட்டப்பட்டது. அதுகுறித்தெல்லாம் எந்த ஆக்கப்பூர்வமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இப்படி இருந்தால் எப்படி 2026-ம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும்" என்றனர்.
இதுகுறித்து பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்தியிடம் பேசினோம், "தீவிர உறுப்பினர் சேர்க்கை நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது. அமைப்பு தேர்தல்களை எப்படி நடத்த வேண்டும் என ஆலோசனை கொடுப்பதற்காகவே மையக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. கூடவே உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தத் தேவையான ஆலோசனைகளும் தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. கூட்டத்தில் எவ்விதமான பிரச்னையும் இல்லை" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...