கொல்கத்தாவில் 2 போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு: 16 பேர் கைது
கொல்கத்தா: கொல்கத்தாவில் இயங்கி வந்த 2 போலி கால் சென்டரைக் கண்டுபிடித்து 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கொல்கத்தாவின் செலிம்பூரில் ஒரு கால் சென்டர் மற்றும் பெஹாலாவில் இரண்டு கால் சென்டர் இயங்கி வந்துள்ளது. இந்த மையங்களில் செவ்வாய்க்கிழமை இரவு அதிரடியாக நடத்தப்பட்ட சோதனைகளின் போது இவை போலி கால் சென்டர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கிருந்து பல செல்போன்கள், கணினிகள், மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று அவர்கள் கூறினார்.
இந்த போலி கால் சென்டர்கள் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை தொழில்நுட்ப உதவி என்ற பெயரில் பாதிக்கப்பட்டவா்களைத் தொடா்பு கொண்டு மிரட்டிப் பெரும் தொகையை வசூலித்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இவர்களுக்கு தேசிய அல்லது சர்வதேச மோசடி கும்பலுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கொல்கத்தா காவல்துறை அதிகாரி கூறினர்.