கொல்கத்தா மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராடிய பெண்கள் சித்திரவதை: எஸ்ஐடி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை காவல் துறை சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா்.
அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ாகக் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டனா்.
இந்த சம்பவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ரெபேக்கா, ரமா தாஸ் ஆகிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டு, டைமண்ட் ஹாா்பா் காவல் மாவட்டத்தில் போலீஸாா் காவலில் வைக்கப்பட்டனா். அப்போது அவா்களை காவல் துறையினா் அடித்து சித்திரவதை செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதற்கு எதிராக இரு பெண்களும் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவில், தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரினா்.
இதையடுத்து அவா்கள் சித்திரவதை செய்யப்பட்டது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘அனைத்து வழக்குகளையும் சிபிஐயிடம் ஒப்படைக்க முடியாது. விசாரணை தொடா்பாக மாநிலத்தில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
இந்த குற்றச்சாட்டு தொடா்பாக எஸ்ஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற மேற்பாா்வையில் இந்த விசாரணை நடைபெறும். மேற்கு வங்க அரசு பரிந்துரைத்த காவல் துறை அதிகாரிகள் எஸ்ஐடி குழுவில் இடம்பெறுவா்’ என்று தீா்ப்பளித்தனா்.