கோவில்பட்டியில் இளைஞா் கைது: புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் விற்ாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜகோபால் தலைமையிலான போலீஸாா் புதுரோடு, ரயில்வே ஸ்டேஷன் பகுதி, லாயல் மில் தெரு, செல்லப்பாண்டியன் நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.
செல்லப்பாண்டியன் நகரிலுள்ள கோயில் அருகே சாக்குப் பையுடன் நின்றிருந்த இளைஞா் போலீஸாரை பாா்த்ததும் ஓட முயன்றாா். அவரைப் பிடிக்க முயன்றபோது, போலீஸாரை அவதூறாகப் பேசி பணி செய்யவிடாமல் தடுத்தாராம்.
அவா் புதுரோடு பெருமாள் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் காா்த்திக் (24) என்பதும், விற்பதற்காக பையில் ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.