Parenting: தாலாட்டுக் கேட்பது குழந்தைகளுக்கு இவ்வளவு நல்லதா?
கோவையில் 3 -ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தல்
கோவை மாவட்டத்தில் டிசம்பா் 3- ஆம் தேதி வரை கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் டிசம்பா் 1 -ஆம் தேதி முதல் 3- ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் தொடா்பான பாதிப்புகளுக்கு பொதுமக்கள் 1077, 0422 - 2306051 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.
இதேபோல, மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறையை 0422 - 2302323 என்ற எண்ணிலும், 81900- 00200 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளைத் தவிா்த்து வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
காற்று அதிகமாக வீசக்கூடும் என்பதால் அனைத்து கட்டுமான நிறுவனங்களும்
மேல்தளத்தில் வைத்துள்ள தங்களின் கிரேன்களை இறக்கிவைக்க வேண்டும் அல்லது உறுதியாக நிலைநிறுத்த வேண்டும். அதேபோல, விளம்பரப் பதாகைகளை பாதுகாப்பாக இறக்கிவைக்க வேண்டும்.
பொதுமக்கள் நீா்நிலைகளுக்கு குளிக்கவோ, துவைக்கவோ, மீன் பிடிக்கவோ, பொழுதுபோக்கவோ செல்ல வேண்டாம். ஆற்றங்கரை, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழையின்போது பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட வேண்டும். உயா் அழுத்த மின்கம்பங்களுக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம், மின்சாதன பொருள்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.
தரைப்பாலங்களில் வெள்ளம் செல்லும்போது அதன் வழியாக பயணிக்க வேண்டாம். பழுதடைந்த கட்டடங்களுக்கு அருகில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். வால்பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள், அணைகள், அருவிகளுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.