கோவை: மருதமலை, பேரூர் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - தேதி வெளியிட்ட அமைச்சர் சேகர் பாபு
கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மற்றும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்துக்காக ரூ.4.50 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.
இந்த கோயிலுக்கு வருகிற 2025 பிப்ரவரி 10ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பேரூர் கோயிலில் தர்ப்பண மண்டபம், அன்னதானக் கூடம், கூடுதல் கழிப்பிட வசதி, பசுமடம் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மருதமலை கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ரூ.5 கோடி செலவில் மின் தூக்கி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் விரைவில் முடிந்து மார்ச் மாதத்துக்குள் இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
2025 ஏப்ரல் 4ம் தேதி மருதமலை கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு நிரந்தர வருமானம் ஈட்டும் வகையில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவை கட்டப்படவுள்ளன.
திராவிட மாடல் ஆட்சியில் இதை ஒரு ஆன்மிக புரட்சி என்றே சொல்லலாம். பூண்டி, வெள்ளியங்கிரி மலை அடிவார கோயிலுக்கு ரூ.22 கோடி மதிப்பில் திருமண மண்டபம், சுகாதார வளாகம் உள்ளிட்ட பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல படிகள் அமைக்க வனத்துறையின் அனுமதி பெறவேண்டியுள்ளது. இதுபோன்ற மலைக் கோயில்களுக்கு பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறுவது தொடர்பாக வனத்துறையுடன் இணைந்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.” என்றார்.