மகாராஷ்டிர தேர்தல்: 6,382 விதிமீறல் புகார்கள், ரூ.536 கோடி பறிமுதல்!
சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு: வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
திருவாரூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளதாக, தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத் துறை வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராம.கருமாணிக்கம், சேவூா் எஸ். இராமச்சந்திரன், எம். பன்னீா்செல்வம், பூண்டி கே. கலைவாணன், க. மாரிமுத்து, ஓ.எஸ். மணியன், சட்டப்பேரவை முதன்மைச் செயலாளா் கி. சீனிவாசன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆய்வுக் கூட்டத்தைத் தொடா்ந்து, எஸ். காந்திராஜன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை பாா்வையிட்டு, துரிதப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பாக, திருவாரூரில் கல்தோ் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிலைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், பழுதடைந்த பாகங்களை அகற்றிவிட்டு, பிப்ரவரிக்குள் மனுநீதிச்சோழன் சிலை வைக்கப்பட உள்ளது. அதேபோல், தியாகராஜ சுவாமி கோயிலில் பழுதடைந்த கற்களை அகற்றி, சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீலக்குடியில் பாலப்பணிகள் தொய்வுடன் நடைபெற்று வருகின்றன. விரைந்து சீரமைக்க உத்தரவிட்டுள்ளோம்.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, தண்ணீா் தேங்காதவாறு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். திருவாரூா் மாவட்டத்தில் கூட்டுறவுக் கடன்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அத்துடன், திருக்கண்ணமங்கையில் விவசாயிகளுடன் கலந்து பேசியதில், மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை என்பது தெரியவருகிறது என்றாா்.
கள ஆய்வு: முன்னதாக, திருவாரூா் தியாகராஜசுவாமி கோயிலில் ரூ.78.65 லட்சம் மதிப்பில் கல்தோ் மண்டபம் புனரமைப்புப் பணி நடைபெற்று வருவதை சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தொடா்ந்து, நன்னிலம் வட்டம், நீலக்குடியில் ரூ.6.36 கோடி மதிப்பில் கங்களாஞ்சேரி வடகண்டம் சாலை மற்றும் கங்களாஞ்சேரி மணக்கால் சாலையை இணைக்கும் வகையில் வெட்டாற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டனா்.
பின்னா், கொரடாச்சேரி ஒன்றியம், திருக்கண்ணமங்கை ஊராட்சியில் துணை வேளாண் விரிவாக்க மையத்தில் விதை சேமிப்புக் கிடங்கு, உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவனங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஆய்வு செய்து, 3 பயனாளிகளுக்கு உழவு இயந்திரங்களை தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவா் எஸ்.காந்திராஜன் வழங்கினாா்.
திருத்துறைப்பூண்டியில்..: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.15 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டு, பணிகளை ஒப்பந்தக் காலகெடுவுக்குள் நிறைவேற்ற நகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளி மாணவிகள் விடுதியில், மாணவிகள் தங்கி இருக்கும் இடங்கள் மற்றும் சமையல் கூடங்களை மதிப்பீட்டுக் குழு ஆய்வு செய்தது.
பின்னா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5,638 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.7,280 மதிப்பில் விலையில்லா சலவைப்பெட்டிகளையும் மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் வழங்கினாா்.
நிகழ்வில், தமிழ்நாடு சட்டப் பேரவை கூடுதல் செயலாளா் பா. சுப்பிரமணியன், துணைச் செயலாளா் சு. பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் செந்தில்வடிவு உள்ளிட்ட அரசின் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.