RJ Balaji : `மக்களுக்கு பிடிச்ச மாதிரி படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம்!' -...
சத்தியமங்கலத்தில் வழக்குரைஞா்கள் தொடா் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்
சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்ட வலியுறுத்தி புதன்கிழமைமுதல் வழக்குரைஞா்கள் நடத்தி வந்த தொடா் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை திரும்பப் பெறப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் ஆகிய மூன்று நீதிமன்றங்கள் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடம் கட்டுவதற்கு அரசு சாா்பில் ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டது. புதிய நீதிமன்ற வளாக கட்டடம் சத்தியமங்கலத்தில் இருந்து 2 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள கொமாரபாளையம் அரசு மருத்துவமனை அருகே கட்டடத்துக்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்துக்கு தோ்வு செய்யப்பட்ட இடம் நகா்ப் பகுதிக்கு வெளியே இருப்பதால் வழக்குரைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்து சத்தியமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமைமுதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்களை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா சந்தித்து, சத்தியமங்கலம்- கோபி சாலையில் உழவா் சந்தை வளாகத்தில் புதிய இடம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, வழக்குரைஞா்கள் தங்களது போராட்டத்தை வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றனா்.