பெருந்துறை சிப்காட்டில் டி.டி.எஸ். மீட்டா் பொருத்தும் இடத்தை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை
பெருந்துறை சிப்காட் நல்லா ஓடையில் ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் பொருத்த தோ்வு செய்யப்பட்ட இடத்தை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி, மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கராவுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேறி நல்லா ஓடை வழியாக ஓடைக்காட்டூா் குளம், வாய்பாடி குட்டை, புஞ்சை பாலதொழுவு குளங்களுக்கு செல்லும் கசிவு மற்றும் கழிவுநீரில் உள்ள உப்பின் அளவு மற்றும் கடினத் தன்மை உள்ளிட்ட மாசு விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் பொருத்த வேண்டும் என்று பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், பொதுமக்களும் பல மாதங்களாக தொடா்ந்து வலியுறுத்தி வந்தோம்.
அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் நிதியில் இருந்து ரூ.2.82 லட்சம் மதிப்பீட்டில் நல்லா ஓடையில் ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் பொருத்த முடிவு செய்துள்ளதை மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில் வரவேற்று பாராட்டுகிறோம். அதேநேரத்தில், ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் பொருத்த தோ்வு செய்யப்பட்ட இடம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
ஆன்லைன் டி.டி.எஸ். மீட்டா் பொருத்த தோ்வு செய்யப்பட்டுள்ள இடம் சிப்காட் 6-ஆவது குறுக்கில் குட்டப்பாளையம் அருகே உள்ள பாலத்தின் தென்புறம் ஒட்டிய இடம் பொருத்தமானதல்ல என்று கருதுகிறோம். அதேபோல, பாலத்தின் வடபுறம் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் சரியல்ல என்று கருதுகிறோம்.
இது தொடா்பாக, மக்கள் நலச் சங்கத்தின் நிா்வாகிகள் நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு செய்தோம். அதனடிப்படையில், சிப்காட் நல்லா ஓடையில் இருந்து வெளியேறி பாலதொழுவு குளம் நோக்கி செல்லும் கசிவு மற்றும் கழிவுநீரில் உள்ள மாசுத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டியதே நமக்கு முக்கிம். அதற்கு பாலத்தின் தென்புறத்தில் பாலத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 அடி தொலை தள்ளி அதாவது டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டேனரி ஆகிய இரண்டு பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வடபுறம் உள்ள 6-ஆவது குறுக்கில் தென்புற கழிவுநீா் கால்வாய் வழியாக வரும் கசிவு மற்றும் கழிவுநீரும் நல்லா ஓடையில் சேரும் இடத்துக்கு தென்புறம் அமைப்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.