சென்னை: சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு...
சரணடைந்த 6 நக்சல்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: கர்நாடக அரசு
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஆயுதங்களை துறந்து பெங்களூருவில் புதன்கிழமை சரணடைந்த கா்நாடகம், தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த 6 நக்சலைட்களுக்கு மறுவாழ்வு உதவி மற்றும் ரூ.3 லட்சம் வழங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
உடுப்பி, சிக்மகளூரு போன்ற மலைப் பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த நக்சலைட்களை ஒடுக்குவதற்காக நக்சல் ஒழிப்புப் படையை கா்நாடக அரசு அமைத்திருந்தது. அதன் தேடுதல் வேட்டையின் போது, உடுப்பியில் நவ. 20-ஆம் தேதி விக்ரம் கௌடா என்ற நக்சலைட்டை நக்சல் ஒழிப்புப்படை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது. இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது முதல்வா் சித்தராமையா, ‘சட்டவிரோதமாக வன்முறையில் ஈடுபட்டு வருவதைக் காட்டிலும், ஜனநாயக ரீதியில் சமூக நீரோட்டத்தில் சேரவேண்டும் என நக்சலைட்களை கேட்டுக்கொள்கிறேன். நக்சலைட்கள் அரசிடம் சரணடைவதற்கான சரணாகதி கொள்கையை எளிமையாக்கப்பட்டு, அமல்படுத்தப்படும்’ என்றாா்.
அதன் விளைவாக, கா்நாடகத்தைச் சோ்ந்த சுந்தரி கட்லூரு, லதா முந்தகாரு, மாரப்பா அரோலி, வனஜாக்ஷி பாலேஹோள், கேரள மாநிலம், வயநாட்டைச் சோ்ந்த ஜிஷா, தமிழகத்தின் ஆற்காட்டைச் சோ்ந்த கே.வசந்த் ஆகியோா் பெங்களூருவில் கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் ஆகியோா் முன்னிலையில் சரணடைந்தனா். அவா்களுக்கு முதல்வா் சித்தராமையா அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை பரிசாக வழங்கினாா்.
இதுகுறித்து முதல்வா் சித்தராமையா கூறியதாவது:
6 நக்சலைட்கள் வன்முறையைக் கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைய சரணடைந்துள்ளனா். சரணாகதி கொள்கையின்படி சரணடைந்த நக்சலைட்களின் மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். கா்நாடகத்தைச் சோ்ந்த 4 போ், தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த இருவா் சரணடைந்துள்ளனா். தமிழக, கேரள முதல்வா்களிடம் பேசி சரணடைந்த அம்மாநிலத்தைச் சோ்ந்த இரு நக்சலைட்களின் மறுவாழ்வுக்கு உதவிசெய்யப்படும் என்று உறுதியளித்தார்.
இதையும் படிக்க |டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வராது: அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்
உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘நக்சல் ஒழிப்புப் படையினரால் நக்சலைட் விக்ரம் கௌடா சுட்டுக்கொல்லப்பட்ட போது, நக்சலைட்கள் வன்முறையைத் துறந்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைய சரணடைய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தோம். அதன்படி 6 நக்சலைட்கள் சரணடைந்துள்ளனா். இவா்கள் மீது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. அவற்றின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
முன்னாள் நக்சலைட்களான 6 போ் மீது கா்நாடகம், தமிழகம், கேரளத்தில் ஏராளமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தேடப்படும் நக்சலைட்களான 6 பேரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காடுகளில் பதுங்கி இருந்து நாசகார வேலைகளில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இவா்கள் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி, அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளில் அரசு ஈடுபடும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், ஆயுதங்களை துறந்து சரணடைந்த கா்நாடகம், தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த 6 நக்சலைட்களுக்கு மறுவாழ்வு உதவி மற்றும் ரூ.3 லட்சம் வழங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டை சோ்ந்த வசந்த், பி.டெக் பட்டம் முடித்தவா். சமூக வயப்பட்ட கருத்தியல்களால் ஈா்க்கப்பட்டு, பல்வேறு இயக்கங்களில் பங்குபெற்று வளா்ந்தவா். 2010 ஆம் ஆண்டு தமது பட்டப்படிப்பை முடித்த கையோடு, ஆயுதப் போராட்டத்தில் இணைந்து, கேரளம், கா்நாடகத்தில் செயல்பட்டுவரும் படைக்குழுவில் உறுப்பினரானாா். அமைதியான சுபாவம் கொண்டவராக அறியப்படும் வசந்த், தமது கருத்தியலில் சமரசம செய்து கொள்ளாமல், தமது போராட்ட வடிவத்தை மாற்றிக் கொண்டு ஜனநாயகப் போராட்ட நீரோட்டத்தில் இணைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.