செய்திகள் :

"சாதிவாரி கணக்கெடுப்புப் பணிகள் அக்., 18 வரை நீட்டிப்பு; அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை" - சித்தராமையா

post image

காங்கிரஸ் கட்சியானது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலின்போதும் சரி, தேர்தலுக்குப் பிறகும் சரி தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

வெறுமனே மத்திய பா.ஜ.க அரசை வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல் தாங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் தாங்களாக முன்வந்து மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வருகிறது காங்கிரஸ்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தாங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களில் ஒன்றான தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்தது காங்கிரஸ்.

சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு

அதில், BC 46.25 சதவிகிதம், SC 17.43 சதவிகிதம், ST 10.45 சதவிகிதம், OC (இதர சாதிகள்) 13.31 சதவிகிதம், BC முஸ்லிம் 10.08 சதவிகிதம், OC முஸ்லிம் 2.48 சதவிகிதம் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இப்போது அடுத்தபடியாக கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிப்பதில் காங்கிரஸ் தீவிரமாக இருக்கிறது.

முன்னதாக, 2015-ல் இன்றைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது.

அது எடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்போது புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவெடுத்தது சித்தராமையா அரசு.

இதுகுறித்து சித்தராமையா கடந்த மாதம், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் தலைமையில் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 7 வரை நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் என்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அறிவித்திருந்தார்.

மேலும், இந்தக் கணக்கெடுப்பிற்கு 60 கேள்விகள் கொண்ட வினாத்தாள் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, குறிப்பிட்ட தேதியில் தொடங்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு இன்று (அக்டோபர் 7) நிறைவடைந்திருக்க வேண்டும்.

கர்நாடகா முதல்வர் சித்தராமையா
கர்நாடகா முதல்வர் சித்தராமையா

ஆனால், பல மாவட்டங்களில் இப்பணி முழுமையாக முடியாததால் இதற்கான காலக்கெடு அக்டோபர் 18 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

அரசு ஆசிரியர்கள் இதில் ஈடுபட்டுவருவதால் இந்த நீட்டிப்பு காரணமாக அக்டோபர் 8 முதல் 18 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இன்று பேசிய சித்தராமையா, "அக்டோபர் 7-ம் தேதியோடு கணக்கெடுப்பை முடிக்க திட்டமிட்டிருந்தோம்.

சில மாவட்டங்களில் கிட்டத்தட்ட கணக்கெடுப்பு முடிந்துவிட்டது. சில மாவட்டங்களில் தேக்கமாக இருக்கிறது.

உதாரணத்துக்கு, கொப்பல் மாவட்டத்தில் 97 சதவிகிதம் கணக்கெடுப்பு முடிந்துவிட்டது.

உடுப்பி, தட்சிண கன்னட மாவட்டங்களில் 63 சதவிகிதம், 60 சதவிகிதம் பணிகள்தான் நிறைவடைந்திருக்கின்றன.

முழு மாநிலத்திலும் நாங்கள் எதிர்பார்த்தபடி கணக்கெடுப்பு முடிக்கப்படவில்லை.

எனவே, அக்டோபர் 18 வரை கணக்கெடுப்பு நடைபெறும். இடைநிலைத் தேர்வில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டும் கணக்கெடுப்பு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், கணக்கெடுப்புப் பணியின்போது உயிரிழந்த 3 ஊழியர்களுக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்திலும் சித்தராமையா பதிவிட்டிருக்கிறார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க ஆளும் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், தி.மு.க அரசோ அது மத்திய அரசுதான் நடத்த வேண்டும் எனக் கூறுகிறது.

"இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டுமா?" - இஸ்ரேலியர்களின் மனநிலை குறித்த ஆய்வு சொல்வது என்ன?

இதே நாள் 2023 அன்று இஸ்ரேல் - காஸா போர் தொடங்கியது. இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. சர்வதேச விதி மீறலில் தொடங்கி, ஐ.நா சபையை அவமானப்படுத்தியது, சர்வதேச நீதிமன்றத்தைப் புறக்கணித்தது, சர்வதே... மேலும் பார்க்க

பீகார் சட்டமன்றத் தேர்தல்: தொகுதி பங்கீட்டில் இழுபறி; முட்டி மோதும் கட்சிகள்; என்ன நடக்கிறது?

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. தொடர்ந்து நிதீஷ் குமார் முதல்வராக இருப்பதால் இத்தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இ... மேலும் பார்க்க

அரசு கேபிளில் இருந்து புதிய தலைமுறை சேனல் முடக்கம்: வலுக்கும் கண்டனம்; ஆசிரியர் சமஸ் சொல்வது என்ன?

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த 2016-ம் ஆண்டு முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதன்முறையாக முதல்வர் அரியணையில் ஏறினார் இப்போதைய எதிர்... மேலும் பார்க்க

புதிய தலைமுறை: "கருத்துச் சுதந்திரம் என வாய்கிழியப் பேசிவிட்டு ஊடகங்கள் மீது ஆதிக்கம்" - சீமான்

தமிழில் முன்னணி செய்தி சேனல்களில் ஒன்றான `புதிய தலைமுறை' சேனல், அரசு கேபிளில் முடக்கம் செய்யப்பட்டிருப்பதாக சேனல் நிர்வாகம் குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறது.இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள்... மேலும் பார்க்க