சாலையோர வியாபாரியின் பார்வையில் `அன்பே சிவம்’ ! | My Vikatan
நான் ஒரு சாலையோரக் கடை வியாபாரி. சாலையில் கடை வைத்திருப்பதால், அந்த சாலையில் நிகழும் சிறு சிறு விபத்துகளின் போது முதலுதவி செய்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகிவிட்டது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு நலமுடன் அனுப்பி வைப்பது என் மனத்திற்கு நிம்மதியை அளிக்கிறது. ஆனால் மீளாதவர்களின் நினைவு, என் மனதில் அழிக்க முடியாத துயரத்தை ஏற்படுத்துகிறது.
ஒருநாள், ஓடி விளையாடும் அளவுக்கு வளர்ந்த நாய்க்குட்டி, தன்னைக் குறித்த ஆபத்தை அறியாமல் சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. சாலையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அந்த நாய்க்குட்டி, கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு காரின் சக்கரத்தில் பாய்ந்து உயிரிழந்தது. இந்த விபத்து அனைவருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
Accidents Happens :-
என்றைக்காவது ஒருநாள், அதே மாதிரியான ஒரு நாயைக் காணும் போது, அந்த நாய்க்குட்டியின் நினைவுகள் மனதில் வெள்ளம்போல் விரிகின்றன. அந்த நினைவுகள் என்னை சோகத்தில் ஆழ்த்திவிட்டு செல்லும். அப்படி ஒரு நாயைக் கண்டபோது, “இந்த உலகம் ரொம்ப பெருசு” என்று சொல்லித் துயரப்பட்ட நெஞ்சில் அழகிய முத்திரையிட்டு மறைந்தது ‘அன்பே சிவம்’ படத்தில் வரும் 'சங்கு'.
"Dog" is the reverse of "God"
படத்தை விபத்திற்கு முன் விபத்திற்கு பின் என பிரிக்கலாம். நல்லசிவம் முன் 'நல்லா' வாக இருந்து பின் 'சிவம்' ஆக, அன்பரசு முன்பு 'Ars' ஆக இருந்து மீண்டும் அன்பரசு ஆகி , சனியன் என்கிற நாய் 'சங்கு'வாக மாறுவதைப் பார்க்கலாம். அந்த நாயானது "நல்லா" என்கிற நல்லசிவம் வாழ்க்கையில் ஒரு விபத்தினூடாக உள்ளே வந்தது. விபத்துக்கு பின், நல்லா மீண்டும் விபத்து நடந்த இடத்திற்கு செல்வார். அங்கு சாலையோரக் கடைக்காரர்கள் கருணையுடன் அவரை அணுகுவர். அப்போது, அவருக்கு விபத்து ஏற்படுத்திய நாயை சிலர் "சனியன்" என்று வெறுப்புடன் அழைப்பர். ஆனால், அந்த நாயால் விபத்துக்கு ஆளான சிவம், அதை தன்னுடன் அழைத்துச் செல்வார்.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் அன்பு மற்றும் கருணையின் வழியில் பார்க்கும்போது, மக்களுக்கு பதிலாக விபத்தில் அந்த நாய் சிக்கியிருந்தால், அனைவரின் கருணையும் அந்த நாய் மீது இருந்திருக்கும். அன்பு மற்றும் கருணையின் பார்வையில், அனைவரும் சமமாகவே உள்ளனர். ஆகவே, 'அன்பே சிவம்' என்பதால், "சனியன்" என்கிற நாயை "சங்கு" என்று பெயரிட்டு அன்புடன் வளர்ப்பார்.
இரண்டாவது காரணம், 'சங்கு' வெறும் விபத்தாக மட்டும் வரவில்லை. வரலாற்றில் முதன்முதலில் மனிதனை தன் எஜமானாக ஏற்றுக் கொண்டது நாய் தான். விபத்திற்கு முன் சிங்கம் போன்று மீசையை முறுக்கிக்கொண்டு பகைவர்களை எதிர்கொள்ளும் போர்க்குணம் கொண்ட நல்லா, விபத்திற்கு பின் 10% உயிர்பிழைத்து ஒரு கால் மற்றும் கை செயலிழந்த சிவமாக வாழ்வதைப் போல, ஆரம்பத்தில் 100% ஓநாயாக இருந்து பின்னர் பரிணாம மாற்றத்தால் 10% ஓநாயாக பலவீனமடைந்து வேட்டை நாயாக மாற்றப்பட்ட வாயில்லாப் பிராணியான ‘சங்கு’-வையும் அரவணைப்பது அவர் சார்ந்த கொள்கையாகும். பலவீனத்திற்கு ஆதரவாக தோள் கொடுப்பதும் கம்யூனிசம் தான்.
உலக வரலாற்றில் பலவீனமான ஒருவர் பலமிக்க ஒருவரை வென்றார் என்றால், நமக்கு தாவீது செய்த சம்பவம் தான் நினைவுக்கு வரும். ஒரு இறைத்தூதரின் முயற்சிகளில், கடைசி நேரத்தில் இறைவனுடைய உதவி கிடைக்கும். தன்னையே தூது சொல்லும் தூதுவராக பாவிக்கிறார் சிவம்; வீதி நாடகங்களின் மூலம் தனது செய்தியை மக்களுக்கு மத்தியில் எடுத்துச் செல்கிறார். இறுதியில் இறைவனின் உதவியும் அவருக்குக் கிடைக்கிறது. முழு முயற்சியையும் மனிதனிடம் விட்டுவிட்டு கடைசியில் உதவுவதால் இறைவனைப் பற்றி இறுதியில் அறிவிக்கிறார்.
தூதுத்துவத்தின் முக்கிய வேலை இறைவனை உணரச் செய்வதே. அவர் சந்திக்கும் மனிதர்களிடம் அவர் 90% கம்யூனிச கருத்துக்களை வைக்கிறார், அதில் அவர்களுக்கிடையே உடன்பாடு ஏற்பட்டதுடன், இறுதியில் 10% தான் கடவுளைப் பற்றிப் பேசுகிறார்.
விபத்தில் இரண்டு கால்களில் ஒன்றிற்கு 10% வளர்ச்சி குறைவாகிப் போய்விடும். அந்த ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்தது போல், மனித ஏற்றத் தாழ்வுகளை கலைந்து சமன் செய்யும் மனிதர்களைக் காணும்போது அவர்களிடம் கடவுளைப் பற்றிப் பேசுகிறார். சமமாகாகத வரை, கம்யூனிசமே பிரதானம்.
Last word:
முதலாளித்துவத்தின் உச்சிப் படியிலுள்ள விமானப் போக்குவரத்தில் வழக்கமாக பயணிக்கும் Ars என்ற இளைஞர், சொகுசுப் போக்குவரத்து அனைத்தும் தடைப்பட்டு பாதியில் நிற்க, சிவம் உதவியை நாடி, கடைசியில் ஆம்புலன்சிலும் பயணித்து, மனமாற்றம் அடைந்து அன்பரசாக மாறுவதற்கு காரணமாக மீண்டுமொரு விபத்து நிகழ்கிறது.
இவர் விபத்தில் சிக்கவில்லை. ஆனால் விபத்தில் அடிபட்டு ரத்தம் இழந்த ஒரு சிறுவனுக்கு தன்னிடம் உள்ள வளமான ரத்தத்தை நன்கொடையாக வழங்கி, அறிமுகமில்லாத அந்த சிறுவனுக்காக கண்ணீரும் விட்ட அந்த சமயம் தான்.. அவருடனான கடைசி 10% பயணத்தில் கடவுளைப் பற்றி அறிவிக்க தூண்டியது.
சிவம் இறுதியில் தொழிலாளர்களின் பிரச்னைகளை சரிசெய்த பின், ஆயுதத்துடன் அவரைக் கொல்ல வருபவர் மனம் மாறித் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, பலமும் பலவீனமும் சமனாகும் தருணத்தில், சிவம் கடவுளைப் பற்றி பேசுகிறார். பின்னர், 'உங்கள் பொழப்ப கெடுக்க மாட்டேன்; பொழச்சுப் போங்க,' என்று கூறி பலவீனத்தையும் பலத்தையும் சமப்படுத்தி முடிக்கிறார்.
படத்தில் ஒரு காட்சி வரும், சேறு நிறைந்த சாலையில் ஒருவர் நடந்து செல்வார். மற்றொருவர் இருசக்கர வாகனத்தில் வருகிறார். இப்போது சேற்றால் பாதிக்கப்படுபவர் நடந்து செல்பவரே. பிறகு ஒருவர் நான்கு சக்கர வாகனத்தில் வருவார். இப்போது இரண்டு சக்கர வாகன ஓட்டுநர் பாதிக்கப்படுவார். இதில் சேறு தான் பாதிப்பை ஏற்படுத்தியது என்று சொல்வது சரியாகுமா..?
பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களிலும் அநீதியிலும் பெண் சுதந்திரத்தை காரணம் காட்டி கேள்விகளை முன்வைப்பது பகுத்தறிவா..?
தற்போது சாலைகளில் அதிக இயந்திரத்திறன் கொண்ட வாகனங்களுக்கு மத்தியில் விபத்து ஏற்படும் வேளையில், அதிகம் பாதிக்கப்படும் திறன் குறைந்த, திறனற்ற மனிதர்களுக்காக நிற்பதும் கம்யூனிசம் தான்.
-சுபி தாஸ்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.