Nayanthara: `உங்கள் கணவர் செய்தது எந்த வகையில் நியாயம்?' - இசையமைப்பாளர் எஸ்.எஸ்...
வெடிச் சத்தமும் வீங்கிய முதுகும் - அமெரிக்க வாழ் தமிழரின் தீபாவளி நினைவுகள் | My Vikatan
பால்ய காலத்தில், பள்ளிப் பருவத்தில் தீபாவளி என்றாலே மனது குதூகலிக்கும் ஒரு நிகழ்வு. தீபாவளி என்பது தமிழர் கொண்டாடும் விழாவா? அது தேவையா? என்ற கேள்விகளெல்லாம் மனதுக்குள் தோன்றாத ஒரு காலம். எங்கள் கிராமத்தில் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் அளவுக்கு தீபாவளி விமரிசையாக இல்லாவிட்டாலும், பட்டாசுகளுக்காகவே மனது பரவசப்படும் விழா அது.
பல வருடங்களுக்குப் பிறகு இந்த தீபாவளிக்கு என் கிராமத்தில் குடும்பத்தோடு இருக்கும் வாய்ப்பு கிட்டியது. வீடு நிறையப் பட்டாசுகள், புத்தாடைகள், விதவிதமான பலகாரங்கள், காய்கறி, பழங்கள் இப்படி ஓர் அறை முழுவதும் கொட்டிக் கிடப்பதைப் பார்க்கையில் மனது குதூகலிக்கவில்லை.
ஏதோ ஒன்று குறைவது போலவே இருந்தது. என் குடும்பம் சற்று பெரியது. நாங்கள் மொத்தம் ஐந்து பேர். ஒவ்வொருவருக்கும் இரண்டு, மூன்று குழந்தைகள். ஒரு சிலரைத் தவிர அனைவரும் பதினெட்டுகளைத் தாண்டியவர்கள். குதூகலம்..... கொண்டாட்டம்..... நிரம்பிக் கிடக்கின்றன.
ஆனாலும், எனக்குள் என் பால்யப் பருவத்தில் ஏற்பட்ட தீபாவளிக் கொண்டாட்டத்தைத் திரும்பக் கொண்டுவர, திரும்பத் திரும்ப முயற்சிக்கிறேன். ம்... ஹும். சற்று கடினமாகத்தான் இருக்கிறது.
ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். தீபாவளிக்குப் பத்து நாட்கள் முன்பு எனக்கும், மற்றவர்களுக்கும் துணிமணிகள், பட்டாசுகள் வாங்குவதற்கு என்னைப் பக்கத்தில் இருக்கும் சிறு நகரமான காளையார்கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக என் தந்தை சொல்லியிருந்தார்.
ஏனெனில், நான் எனது துணியைத் தேர்வு செய்யவில்லையென்றால் அடுத்த தீபாவளிவரை அந்தத் துணியை நான் உடுத்த மாட்டேன் என்ற எனது பிடிவாதம் அனைவருக்கும் தெரியும். ஆனாலும், நான் தேர்வு செய்யும் அனைத்தும் மற்ற அனைவருக்கும் பிடிக்கும் என்பது எனக்கு அனைவரும் கொடுத்த சான்றிதழ். இப்படியாக ஒவ்வொரு நாளும் என் தந்தை அழைத்துச் செல்வார் எனக் காத்துக் கிடக்கிறேன். ஒருவழியாக காளையார்கோவில் வந்தாகிவிட்டது.
அப்போதெல்லாம் ரெடிமேட் என்று சொல்லக்கூடிய முன்கூட்டியே தைத்து விற்கும் உடைகள் பெரிய அளவில் கிடைத்ததில்லை. புதுத்துணிகளை வாங்கி, டெய்லரிடம் அளவு கொடுத்து, சில தினங்கள் காத்துக்கிடந்துதான் வாங்கவேண்டும். துணி தைக்கும் டெய்லர் `எலிசபெத் டெய்லர்' ரேஞ்சுக்கு எட்டாக்கனியாகத்தான் தெரிவார். ஒரு வழியாக தீபாவளிக்கு முதல் தினம் நடுநிசிக்குத்தான் கால் சட்டையும், மேல் சட்டையும் தயாராகும்.
அதற்குள் நமக்கு நாக்குத் தள்ளிவிடும். இப்படியாக துணிமணிகளோடு, ஏகப்பட்ட பட்டாசுகளும் வீடு வந்து சேரும். வறண்ட, வானம் பார்த்த பூமியான எங்கள் தென் மாவட்டங்களில் இவ்வளவு தேவைகளையும் பூர்த்தி செய்யத் தேவையான பணத்தை, என் தந்தை எப்படி ஏற்பாடு செய்தார் என்பதையெல்லாம் நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அனைவருக்கும் புத்தாடைகள் எடுத்துத் தந்த என் தந்தை அவருக்கும், என் அம்மாவுக்கும் ஒரு ஒட்டுத்துணிகூட எடுத்துக்கொண்டதில்லை என்பதை எங்களுக்குத் தெரியாத வண்ணம் மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டனர் என்பதுகூட எங்கள் கவனத்திற்கு வந்ததில்லை.
எங்கள் ஐந்து பேருக்கும் புத்தாடைகள் எடுத்து, நான் டெய்லரிடம் அளவு கொடுத்து வந்தபின் தீபாவளிக்கு முதல் நாள் அனைத்தும் வீட்டுக்கு வந்துவிடும். யாருக்கும் தெரியாமல், ஆர்வத்தில் அனைத்தையும் பிரித்துப் பார்ப்பதுதான் என் வழக்கமான வேலை. குறிப்பாக எனது புத்தாடையையும், பட்டாசுகளையும் திரும்பத் திரும்ப பார்த்துக்கொள்வேன். அதில் எனக்கு பல வருடங்களாகப் புரியாத விஷயம் ஒன்றே ஒன்றுதான். நாங்கள் ஐந்து பேர் பிள்ளைகள்.
படிப்பு ஏறவில்லையென்பதாலும், மேற்கொண்டு படிக்க விருப்பமில்லாததாலும் எங்கள் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த, 'பாண்டி' அம்மாவுக்கு ஒத்தாசையாக எங்கள் வீட்டில் இருந்தான். எனக்கு இரண்டு வயது மூத்தவன். அவனைச் சேர்த்து ஆறு பேர்தான். ஆனாலும், இரண்டு மூன்று ஜோடி துணிமணிகளும், நான்கைந்து பட்டாசுப் பொட்டலங்கள் அதிகமாகவும் எப்போதும் இருக்கும். நான் அம்மாவிடம் போய் பலமுறை கேட்டதுண்டு. 'எனக்குத் தெரியாதுய்யா, அப்பாக்கிட்ட கேளு' என்று ஒரே பதிலைத்தான் என் அம்மாவும் சொல்வார்.
இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே நானும், பாண்டியும் வீடு சுத்தம் செய்தல், அதிரச மாவு சோ்த்தல், இட்லி, தோசை, பணியாரம் மற்றும் அனைத்துப் பலகாரங்களுக்குத் தேவையான மாவு அரைத்தல் என அனைத்தையும் செய்து கொடுப்போம். தீபாவளிக்கு முந்தைய இரவு முழுக்க நானும், பாண்டியும் என் அம்மாவுக்கு பலகாரங்கள் செய்ய உதவியாய் இருப்போம் என்கிற நிபந்தனையின் அடிப்படையில், என் தந்தை எனக்கும், பாண்டிக்கும் வெடிகளைச் சம பங்காகப் பிரித்துக்கொடுப்பார்.
இரவு முழுக்க என் அம்மாவுக்கு உதவி செய்துவிட்டு, நடுநிசியில் பட்டாசு வெடிக்கத் தொடங்குவேன். ஆனால், பாண்டி வெடிக்க மாட்டான். பத்திரமாகச் சோ்த்து வைத்திருப்பான்.
வெடித்த பிறகு வாசலில் நிறைய பேப்பர் கிடக்கும், அதிக வெடி வெடித்ததாக பீற்றிக்கொள்ளலாம் என்கிற ஓர் அற்ப ஆசையால், லட்சுமி வெடி மற்றும் யானை வெடி தவிர்த்து அனைத்து சீனி வெடிகளையும், சரவெடிகளையும், கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம், வெங்காய வெடி, கலர் கலர் தீக்குச்சிப் பெட்டிகள், அணுகுண்டுகள், பாம்பு மாத்திரை, சாட்டை, ராக்கெட் இப்படி அனைத்தையும் வெடித்து முடித்திருப்பேன்.
வெடிச்சத்தத்தில் என் தம்பி தங்கைகள் அனைவரும் எழுந்து விடுவார்கள். அது மும்மரமாகப் பலகாரம் செய்து கொண்டிருக்கும் என் அம்மாவைப் பாதிக்கும்.
அதற்கு என் அப்பாவிடமிருந்து திட்டு விழுந்து கொண்டேயிருக்கும். ஆனால், பாண்டி மாத்திரம் அவன் வெடிகளை எடுத்து ஒளித்து வைத்துக்கொள்வான். நான் ஏற்கெனவே இருந்த வெடிகள் அனைத்தையும் வெடித்துவிட்டு, தனியாக இருந்த பொட்டலங்களில் இருந்து ஒவ்வொன்றாக உருவி, திருடியும் வெடிப்பதுண்டு.
ஒரு வழியாக விடிந்து விடும். புதுத்துணிகளுக்கு மஞ்சள் தடவச்சொல்வார்கள். அப்போதும் 'இந்த ட்ரெஸ்ஸெல்லாம் யாருக்கும்மா' எனக் கேட்டால், என் அம்மா சொல்ல மாட்டார். பிறகு என் தந்தை, ஒவ்வொருவராக ஒன்றன்பின் ஒன்றாக அழைத்து தலையில் நல்லெண்ணெய் வைத்து, எங்கள் ஆறு பேரையும் கண்மாய்க்குக் குளிக்க அழைத்துச் சென்று, தலையில் சீயக்காய் தேய்த்துக் குளிக்க வைப்பார்.
வந்து சாமி கும்பிடும் சம்பிரதாயங்கள் முடிந்து புத்தாடை அணியும் படலம் தொடங்கும். குதூகலத்தில் குதித்தாடி அவரவர் உடைகளை அணிந்து கொள்வோம்.
என் அப்பா, அம்மாவின் முகங்களில் அப்படியொரு மகிழ்ச்சி, மன நிறைவு. அவர்களுடைய முகத்தை மாத்திரமே பார்த்துக் களித்த எங்களுக்கு அவர்கள் அணிந்திருக்கும் பழைய ஆடைகள் கவனத்தில் வந்ததில்லை.
புத்தாடை அணிந்துகொண்டு வெடி போட்டால் தீ பட்டுவிடும் என்று மீண்டும் பழைய டவுசருக்குள் நுழைந்து வெடி போடுவோம். அப்போது பக்கத்துக் குடியிருப்பிலிருந்து இரண்டு மூன்று சிறுவர்கள், சிறுமியர் தாய் தந்தையரோடு வந்து நின்றார்கள். என் தந்தை ஏற்கெனவே கூறியிருப்பார் போலும்....
என் அம்மா அந்தப் புத்தாடைகளை அவர்களுக்குத் தந்து அணிந்துகொள்ளச் செய்து, பிறகு அனைவருக்கும் பட்டாசுகளையும் கொடுப்பார். கிட்டத்தட்ட எனக்கு ஏற்கனவே பட்டாசுகள் தீர்ந்துபோன நிலையில், முழுப் பட்டாசுப் பொட்டலங்கள் அவர்களுக்குக் கை மாறுகையில் எனக்குக் கொஞ்சம்..... ம்...ஹீம்.... கொஞ்சமல்ல..... சற்று கூடுதலாகவே கடுப்பாகும்.
பிறகு மாறி மாறிக் கடன் வாங்கி வெடி வெடிப்போம். மீண்டும் புத்தாடைக்குள் நுழைவோம். ஊரை ஒரு வலம் வந்து யார் வீட்டில் அதிகம் பட்டாசு வெடித்திருக்கிறார்கள் என்ற சர்வே கணக்குகள் எல்லாம் எடுத்து வீடு திரும்பினால், அங்கு எனக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.
பாண்டி புத்தாடைகளைக் கையில் வைத்துக்கொண்டு பழைய ஆடையிலேயே நின்றுகொண்டு, என் அம்மாவிடம் "எனக்கு இந்த டவுசர், சட்டை வேண்டாம், கொடகொடன்னு இருக்கு" என்றான். ஒனக்கு அளவு குடுக்காததால கொஞ்சம் கொடகொடன்னு இருக்குய்யா, நல்ல நாளும் அதுவுமா புதுத்துணி போடணும், இன்னிக்கி மட்டும் போட்டுக்க, நாளைக்கி புடிச்சி தச்சுக்கலாம்" என என் அம்மா எவ்வளவோ சமாதானம் செய்கிறார்.
அவன் முடியாதென ஒற்றைக்காலில் நின்றதோடு மட்டுமல்லாமல், "அவனுக்கு மட்டும் எப்படி சரியா இருக்கும், அந்த ட்ரெஸ்ஸ வாங்கிக் குடுங்க" என்றான். இதைக்கேட்ட நான் அதிர்ச்சியில் அடுத்த தெருவுக்கு எஸ்கேப் ஆகிவிட நினைத்தேன்.
அப்போது எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பக்கத்து ஊர் அய்யா, "டேய், என்ன சின்னப்புள்ளதனமா இருக்கு. ரெண்டு துணியும் ஒரே மாதிரிதான் இருக்கு. நீ கொஞ்சம் பெரிய பையன்னு கொஞ்சம் பெருசா தைக்கச் சொன்ன எடத்துல கொஞ்சம் கூடத் தைச்சுப்புட்டான்.
நாளைக்கிப் புடிச்சுத் தைச்சுக்கலாம். அவன் பள்ளிக்கொடம் போற பய, அவங்கூட போயி வீம்பு பண்ணிகிட்டு.... இப்பப் போடப்போறியா இல்லையாடா" என அதட்ட அவன் அழுது அடம் பிடிக்கத் தொடங்கி விட்டான். விசயம் காதுக்கு எட்ட, ஒளிந்து கொண்டு திரிந்த என்னை உச்சஸ்தாயியில் அழைத்தார் என் தந்தை.
வந்தேன். எனது புதிய துணியை கழட்டச் சொன்னார். நான் தயங்கினேன். அடுத்த நாள் பள்ளியில் தீபாவளிச் சட்டை, டவுசர் எங்கே எனக் கேட்பார்களே என்ற பெரும் குழப்பத்தில், என் அம்மாவைப் பார்க்கிறேன். சூரசம்ஹாரத்தில் வதம் செய்ய, தன் மகனான அசுரனை அழிக்க, வேல் எடுத்துக்கொடுக்கும் சிக்கல் வேல்நெடுங்கண்ணித் தாயை ஏக்கத்தோடு பார்க்கும் பரிதாபத்துக்குரிய, அசுரனைப்போல் கையறுநிலையில் என் அம்மாவைப் பார்க்கிறேன்.
பிறகு வேறு வழியில்லாமல் கழட்டிக்கொடுத்தேன். ஆனால், பாண்டியின் துணியை என்னிடம் தந்து, என் தந்தை போட்டுக் காண்பிக்கச் சொன்னார். நான் அழுதுகொண்டே மறுத்தேன். இந்த நேரம் பார்த்து, பாண்டி என் உடையில் வந்தான். சற்று பிடிப்பாகவே இருந்தது. ஆனாலும் அவனுக்கு அதில் திருப்தி. சற்று நேரத்தில் இன்னொரு குடும்பம் பிள்ளை, குட்டிகளோடு வந்ததுது. என் தந்தை அவர்களுக்குரிய புதுத் துணிகளை எடுத்து வந்து கொடுத்தார். பட்டாசுகளைத் தேடுகையில் அங்கு அந்தப் பொட்டலம் அங்கு இல்லை.
எப்படியிருக்கும்? நான்தான் அனைத்தையும் முடித்துவிட்டேனே! என் அப்பாவுக்கு எனது குறும்புத் தனங்கள் அனைத்தும் தொியும். புதுத்துணி விவகாரம் ஒருபுறம், தீபாவளி அதுவுமா வந்திருந்த பெரியவருக்கு குடும்பத்துல வேறொரு பிரச்னை. கோபத்தின் உச்சத்தில் இருந்த என் அப்பா, தூணில் சாய்ந்துகொண்டிருந்த என்னை அடிப்பதற்காக ஓடி வருகிறார்.
கிட்டத்தட்ட அவருடைய வைரம் பாய்ந்த கைகள் என் முதுகைப் பதம் பார்ப்பதற்குள் நான் சாமர்த்தியமாக விலகிக்கொண்டேன். அவ்வளவுதான்...... என் முதுகு தப்பியது மட்டுமல்ல, நான் தப்பித்து என் அம்மாவிடம் ஓடி அடுப்படிக்குள் அடைக்கலம் புகுந்து கொண்டேன். வாசலில் ஏதோ சலசலப்பு. ஒருவர் பச்சைத்தண்ணீர் கேட்கிறார். மண்ணெண்ணை ஒருவர் கேட்கிறார், தேங்காய் எண்ணெய் ஒருவர் கேட்கிறார். ஒருவர் ஒத்தடம் கொடுக்கத் தயாராகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
என் தந்தையில் கை நேராக நான் சாய்ந்திருந்த தூணில் லேண்டாகி விட்டது. கை விரல்கள் அனைத்தும் இரத்தம் கட்டிக்கொண்டது. பிறகு என் மீது பாய்ந்த கோபக்கணைகள் ஏராளம், தாராளம். இப்படியாக ஒவ்வொரு தீபாவளிக்கும் ஏதாவதொரு காரணத்தினால் நான் பட்டாசாக வெடிக்கப் படுவேன். பட்டாசுகளுக்கு இணையாக என் முதுகும் பலமுறை பட்டாசாகியிருக்கிறது. ஆனாலும், அவற்றில் ஏதோ ஒரு மன நிறைவு இருந்ததாகவே உணர்கிறேன்.
அன்றைய காலகட்டத்தில், தீபாவளி, பொங்கல் இந்த இரண்டு விசேசங்களுக்கு மாத்திரம் இரண்டு புதிய உடைகள் கிடைப்பதே பெரிய விஷயம். அதிக பட்சம் ஐம்பது ரூபாய்க்குப் பட்டாசு வாங்கி அவற்றை ஆறேழு பங்காக்கி, பகிர்ந்தளித்த அற்புதமான தருணங்கள் என் கண்களில் இன்னும் நிழலாடுகின்றன.
இன்று நாங்கள் ஐவரும் குடும்பத்தோடு அம்மாவுடன் தீபாவளி கொண்டாடுகிறோம். பட்டாசு வாங்கியிருக்கிறோம். நிறைய உடைகள் வாங்கியிருக்கிறோம். இதோ.... நான் மேற்கூறிய அந்த "பாண்டி"யும் குடும்பத்தோடு இங்கே எங்களோடு இருக்கிறான். அவனுக்கும், அவன் குடும்பத்தாருக்கும் நாங்கள் ஐந்து பேரும் ஐந்து விதமான உடைகள், பட்டாசுகள் தந்து மகிழ்கிறோம்.
என் கிராமத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைவருக்குமே புத்தாடைகளும், பட்டாசுகளும் வாங்கித் தருகிறோம். அவர்கள் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி. அதன் மூலம் எங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.
ஆனாலும், ஒருமுறைகூட தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ புதிய உடை வாங்கி அணிந்து கொள்ளாத என் தந்தை என் எண்ண ஓட்டத்தில் வந்து வந்து செல்கிறார். எங்களால் மகிழ்வுறும் ஒவ்வொருவரின் முக மலர்ச்சியிலும் என் தந்தையைப் பார்க்கிறேன். இன்றுபோல் அன்று பெரும் வசதிகளும், வாய்ப்புகளும் இல்லை, ஆனால், மனம் நிறைய மகிழ்வான தருணங்கள் கொட்டிக்கிடந்தன. இன்று எல்லாம் இருப்பது போலவே தோன்றுகிறது. ஆனால், எதுவுமே நிரந்தரம் இல்லை என்கிற எண்ணம் மாத்திரம் என் இதயத்தில் அவ்வப்போது வந்து செல்கிறது....
விரைந்து செல்லும் எந்திர வாழ்க்கையில் விஞ்சி நிற்பது பழைய நினைவுகளும்.... உறவுகளும்தான்.!
- நவின் சீதாராமன் (அமெரிக்கா)