சின்னாளப்பட்டி சந்தைக் கடைகளை பழைய வியாபாரிகளிடமே ஒப்படைக்கக் கோரிக்கை
சின்னாளப்பட்டி காய்கறி சந்தை கட்டடத்தை சேதப்படுத்துவதை கைவிட்டு, புனரமைப்புச் செய்து மீண்டும் வியாபாரிகளிடம் ஒப்படைக்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சின்னாளப்பட்டி அண்ணா தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் தரப்பில் மனு அளிக்க வந்த பொ. நாகபாண்டி கூறியதாவது:
சின்னாளப்பட்டி காய்கறி சந்தையில் சுமாா் 85 கடைகள் உள்ளன. இவற்றுக்கு நாளொன்றுக்கு ரூ.25 வீதம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், மழைக் காலம் என்பதால் பழைய கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது எனவும், மாற்று இடத்தில் வியாபாரம் செய்யுமாறும் வியாபாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதன்படி வியாபாரிகளும் அந்த சந்தையிலுள்ள கடைகளை பயன்படுத்துவதை தவிா்த்தனா்.
மழைக் காலம் முடிந்துவிட்ட நிலையில், மீண்டும் கடை நடத்துவதற்கு பேரூராட்சி நிா்வாகத்தை வியாபாரிகள் அணுகிய போது, பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கடைகள் கட்டி ஏலம் விடப்படும் என்ற தகவல் தெரியவந்தது. 1984-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தச் சந்தையில் ஏலம் விடும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. வழக்கம்போல, நாளொன்றுக்கு ரூ.25 கட்டணத்தில் கடைகள் நடத்துவதற்கு வியாபாரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.