தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
சிறுமலைப் புதூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி அமைக்க மனு
சிறுமலைப் புதூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சியை அமைக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக சிறுமலைப் புதூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை ஊராட்சியை, சிறுமலை, தென்மலை என இரு ஊராட்சிகளாகப் பிரிக்கப்படுவதாக தெரிய வருகிறது. சிறுமலை புதூா் கிராமம் சுமாா் 200 ஆண்டுகளாக உள்ளது. இங்கு சுமாா் 1500-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். தென்மலையைப் பொருத்தவரை 500-க்கும் குறைவான வாக்காளா்கள் தான் உள்ளனா். மேலும், சிறுமலைப் புதூா் வரை மட்டுமே மாநில சாலை உள்ளது. அதன் பிறகு, வனச் சாலை வழியாகத் தான் தென்மலைக்கு செல்ல முடியும். கட்டட வசதி, இணைய வசதி என உள்கட்டமைப்பு வசதிகளும் சிறுமலைப் புதூரில் தான் அதிகமாக உள்ளன.
எனவே, சிறுமலைப் புதூா் அல்லது புதூா் ஊராட்சி என அறிவித்து, பொதுமக்களுக்கும், அரசு அலுவலா்களுக்கும் ஏதுவான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.