சிவாஜி வீடு ஜப்திக்கு எதிரான வழக்கு: ராம்குமாருக்கு உதவ பிரபு மறுப்பு!
நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணையில், ராம்குமாருக்கு உதவ நடிகர் பிரபு தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் பிரபு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், சிவாஜி வீடு ஜப்தி நடவடிக்கையில் பிரபு உதவ மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.
அதற்கு, ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? ஒன்றாகத்தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அவருடைய கடனை நீங்கள் செலுத்தலாமே? இப்போது ராம்குமார் செலுத்த வேண்டிய கடனை கொடுத்துவிட்டு பிறகு, அவரிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம் என நீதிபதி யோசனை தெரிவித்தார்.
ஆனால், அதனை நிராகரித்துவிட்ட பிரபு தரப்பு, ராம்குமார் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளார். அவருக்கு உதவ முடியாது. ராம்குமார் பெற்றரூ. 3 கோடி கடனுக்காக ரு.150 கோடி மதிப்புள்ள வீட்டை முடக்குவதா? தனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட கடனாகப் பெற்றதில்லை. எனவே, ராம்குமாருக்கு உதவ முடியாது என சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவுக்கு எதிரான வழக்கில் பிரபு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.