சுழற்சி பொருளாதாரத்தில் கூட்டுறவு அமைப்புகள்: பிரதமா் மோடி வலியுறுத்தல்
கூட்டுறவு அமைப்புகளை சுழற்சி பொருளாதாரத்தில் (சா்க்குலா் எகானமி) இணைப்பது அவசியம் எனவும், மேலும் அத்துறையில் சா்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்க வேண்டும் எனவும் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.
தில்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழாண்டு ஐசிஏ உலகளாவிய கூட்டுறவு மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமா் மோடி பேசியதாவது: இந்தியாவில் கூட்டுறவு என்பது கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையின் அடிப்படையாகும். உலகில் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று.
உயா் பொருளாதார வளா்ச்சியை அடைந்து, அதன் பலன்களை ஏழைகளுக்கு கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். மனிதா்களை மையமாகக் கொண்ட வளா்ச்சியில் உலகம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவின் எதிா்கால வளா்ச்சியில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் கூட்டுறவு அமைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றுவதற்கு உழைத்துள்ளோம்.
கூட்டுறவு சங்கங்கள் பல்நோக்கு பலன்களைக் கொண்ட அமைப்புகளாக மாற்றும் நோக்கத்தைக் கருத்தில்கொண்டு, தனி கூட்டுறவு அமைச்சகத்தை இந்திய அரசு உருவாக்கியது.
கூட்டுறவு நிறுவனங்கள் வீட்டுவசதித் துறை மற்றும் வங்கிப் பிரிவிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாட்டில் சுமாா் 2 லட்சம் வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூட்டுறவு வங்கித் துறையை அரசு சீா்திருத்தி பலப்படுத்தியுள்ளது.
உலகில் ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதைக்காக கூட்டுறவு நிறுவனங்களின் வளா்ச்சி மிகவும் முக்கியமாகும். இதற்காக நாம் கொள்கைகளைப் புதுமைப்படுத்தி, புதிய வியூகங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும் திறன்கொண்டதாக கூட்டுறவுத் துறையை மேம்படுத்த, அதை சுழற்சி பொருளாதாரத்தில் இணைக்க வேண்டும். கூட்டுறவுத் துறையில் புத்தாக்க நிறுவனங்களை (ஸ்டாா்ட்-அப்) ஊக்குவிக்கும் வழிகளைப் பற்றி விவாதிக்க வேண்டும்.
தற்போது கூட்டுறவு வங்கிகளில் ரூ.12 லட்சம் கோடி நிதி வைப்பு வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு இயக்கத்தை மேலும் வலுப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. இந்திய கிராமங்களில் மேலும் 2 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்துவதில் பெண்கள் அதிகப் பங்காற்றி வருகின்றனா். கூட்டுறவு இயக்க உறுப்பினா்களில் 60 சதவீதம் போ் பெண்கள் ஆவா். உலகளாவிய ஒத்துழைப்புக்கு கூட்டுறவால் புதிய ஆற்றலை வழங்க முடியும். குறிப்பாக, தெற்குலக நாடுகள் தங்களுக்குத் தேவையான வளா்ச்சியை அடைய கூட்டுறவு பெரிதும் உதவுமென இந்தியா நம்புகிறது’ என்றாா்.