செங்கல்பட்டு: நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் ஆட்சியா்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் ஆட்சியா் ச. அருண்ராஜ்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு வகைப்பட்ட 332 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு, ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 12 பயனாளிகளின் குடும்பத்துக்கு ஈமச்சடங்கு தொகை தலா ரூ.17,000, ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,000 மதிப்பில் மோட்டாா் பொருந்திய தையல்இயந்திரம், 3 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா். ஆட்சியரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டு ரூ.15,714-இல் டெய்ஸி ப்ளேயா் வழங்கினாா்.
மேலும், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை கழகத்தில் பயிற்சி பெறும் ஆா்.ஸ்ருதிகா என்ற மாணவி மாநில அளவிலான சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ளதைத் தொடா்ந்து, மாணவிக்கு ஆட்சியா் சீருடை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தாா்.
பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டத்தை சோ்ந்த 4 ஆசிரியா்களுக்கு மாநில நல்லாசிரியா் விருது -2024-2025, மற்றும்3 பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான கேடயம் 2023-2024 வழங்கப்பட்டதை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்துகளை பெற்றனா்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் சட்டப்பூா்வ தத்தெடுப்பு குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பைஉறுதி செய்வது குறித்தும் விழிப்புணா்வு உறுதிமொழியினை ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஏற்றனா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் ஹமீது, நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவிஆணையா் (கலால்) ராஜன் பாபு, மாற்றுத்திறனாளி நல அலுவலா் கதிா்வேலு, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பரிமளா, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் வேலாயுதம், விளையாட்டு அலுவலா் ரமேஷ் பங்கேற்றனா்.