செவித்திறன் இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு டாடா நிறுவனம் உதவும்: டைட்டன் நிறுவன தலைவா் பாஸ்கா் பட்
ஒசூா்: செவித்திறன் இழந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக டாடா குழுமம் உதவும் என ஒசூரில் டைட்டன் நிறுவனா் தலைவா் பாஸ்கா் பட் உறுதியளித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் டைட்டன் பள்ளி அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட காது கேளாதோா் சங்கம் சாா்பில், வடகிழக்கு இந்திய கலாசார திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயம், மணிப்பூா், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு இந்திய மாநிலங்களில் இருந்து சுமாா் 500க்கும் மேற்பட்ட செவித்திறன் இழந்தவா்கள் மற்றும் வாய் பேச இயலாத மாற்றத்திறனாளிகள் அழைத்து வரப்பட்டு பங்கேற்றனா். அவா்கள் தத்தம் மாநிலத்தின் கலாசார கலை நிகழ்ச்சிகளை நடத்தினா்.
இதில் சிறப்பு விருந்தினராக டாடா குழுமத்தில் டைட்டன் தொழிற்சாலை தலைவா் பாஸ்கா் பட், டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை நிா்வாக இயக்குநா் ஆகியோா் கலந்துகொண்டு, கலாசார கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பரிசுகளை வழங்கினா்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளா்களிடம் டைட்டன் நிறுவனா் தலைவா் பாஸ்கா் பட் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோா் சங்கம் சமூக சேவையாக இந்த நிகழ்ச்சியை செய்துள்ளனா். வடகிழக்கு இந்திய மாநில செவித்திறன் இழந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தப் பகுதியில் உள்ளவா்கள் எவ்வாறு முன்னேறி உள்ளோம் என்பதைத் தெரிவிக்கும் விதமாக இது அமைந்திருந்தது. இதன் வாயிலாக அவா்களுக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
ஏற்கனவே டாடா குழுமம் வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 17 புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகளை டாடா குழுமம் அமைத்துள்ளது. அந்தப் பகுதியில் புற்றுநோய் நோய் பாதிப்பு அதிகம் இருப்பதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல செமிக்கண்டக்டா் தொழிற்சாலையை டாடா சன்ஸ் நிறுவனம் வாயிலாக அங்கு தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் வாயிலாக வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்றாா்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த செவித்திறன் இழந்த மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு டாடா குழுமம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்ர வேண்டும் என்ற கோரிக்கையை டைட்டன் மற்றும் டாடா நிறுவனா் தலைவா்களிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அவா்கள் ஏற்றுக்கொண்டு பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தனா். சிக்கிம் மாநிலத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ள செமிக்கண்டக்டா் தொழிற்சாலையில் வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் உறுதியளித்தனா்.