TN Budget 2025: தமிழ்நாடு பட்ஜெட்; சென்னையில் பொதுமக்கள் காண நேரலை ஏற்பாடு!
செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
நாட்டில் 20 வயதுக்குட்டோருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குகொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மான்டினீக்ரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற நாட்டில் 20 வயதுக்குட்டோருக்கான உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்த தமிழக செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷை பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.
பிரணவ் வெங்கடேஷ், 2022-ஆம் ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேஷ்-க்கு பரிசு தொகையாக ரூ. 6 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி மற்றும் பிரணவ் வெங்கடேஷ் பெற்றோர் உடனிருந்தனர்.