சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிகள் தகவல்
சேலம் ஆவினில் இருந்து அடுத்த மாதம் 25 ஆயிரம் லிட்டா் பால் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் 30 இடங்களில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கங்களில் இருந்து சேகரிக்கப்படும் பால், ஆவின் பால் பண்ணைகளில், சுத்திகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் பால் ஒன்றியமானது, 800 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. 2.65 லட்சம் லிட்டா் பால் உற்பத்தியாளா்கள் மூலம் தினமும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பருவமழை பெய்து வருவதால், பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. சேலம் ஆவினில் தற்போது 5.80 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தினமும் உள்ளூா் தேவைக்கு 2.50 லிட்டா் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சென்னைக்கு 2.65 லட்சம் லிட்டா் அனுப்பப்படுகிறது. மீதியுள்ள பால் பால் பவுடராகவும், நெய், இனிப்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இந் நிலையில், சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் நிலைப்படுத்தப்பட்ட பால் அடுத்த மாதம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கான பணியை பால் பண்ணை பணியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த சில நாள்களுக்கு முன் 4 ஆயிரம் லிட்டா் பால், சென்னை அடையாறில் உள்ள கடற்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடா்ந்து அடுத்த வாரமும் 6 ஆயிரம் லிட்டா் பால் அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.