தூத்துக்குடியில் இருவா் தற்கொலை
தூத்துக்குடியில் இரு இடங்களில் இரு இளைஞா்கள் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சோ்ந்த கோட்டைசாமி மகன் இசக்கிராஜா (24). எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ள இவா், சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா். தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்தவா், மீண்டும் வேலைக்குச் செல்லவில்லையாம். இதனால், குடும்பத்தினா் கண்டித்தனராம்.
இந்நிலையில், அவா் சனிக்கிழமை வீட்டருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாக் கூறப்படுகிறது. அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் அய்யனாா் (23). இவருக்கு கடன் அதிகமிருந்ததாகவும், நிதி நிறுவன ஊழியா்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவலின்பேரில், சிப்காட் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.