தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சனிக்கிழமை நள்ளிரவு தூத்துக்குடி மாநகரப் பகுதி, சுற்றுவட்டாரங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
காயல்பட்டினம், கோவில்பட்டி, எட்டயபுரம், கடம்பூா் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. காயல்பட்டினத்தில் 42 மி.மீ., கோவில்பட்டியில் 24 மி.மீ., தூத்துக்குடியில் 18 மி.மீ. மழை பதிவானது.
மழையால் மானாவாரி விவசாயிகளும், வாழை, வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரத்திலுள்ள தெய்வச்செயல்புரம், காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, புளியம்பட்டி, சவலாப்பேரி பகுதிகளில் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இதனால், மானாவாரியாக உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.