ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்- உயர்கல்வித் துறை
Doctor Vikatan: 6 வயதுக் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து வரும் கோழை... தீர்வு உண்டா?
Doctor Vikatan: என் 6 வயதுப் பேரனுக்கு காலையில் எழுந்தவுடன் நெஞ்சிலிருந்து கோழை கோழையாக வருகிறது. இருமல், மூக்கிலிருந்து சளி வருவது எதுவும் இல்லை. தினமும் காலையில் மட்டுமே கோழை பிரச்னை வருகிறது. இதற்கு ஏதாவது தீர்வு உண்டா?
-Uma, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
உங்கள் பேரக்குழந்தையின் இந்தப் பிரச்னைக்கு எளிதான வீட்டு வைத்தியம் ஒன்று நல்ல பலன் தரும். முயற்சி செய்து பாருங்கள். திப்பிலி, அதிமதுரம், சிற்றரத்தை ஆகிய மூன்றையும் தனித்தனியே பொடித்துக்கொள்ளவும். இந்த மூன்றிலிருந்தும் சம அளவு எடுத்துக் கலந்து வைத்துக்கொள்ளவும்.
இந்தப் பொடியை தினமும் காலை மற்றும் இரவில் அரை டீஸ்பூன் அளவுக்கு எடுத்து தேன் அல்லது பாலில் குழைத்து உங்கள் பேரனுக்கு கொடுத்து வாருங்கள். இந்தச் சிகிச்சையை ஒரு மண்டலம் என்று சொல்லப்படும் 48 நாள்களுக்குத் தொடர்ந்து கொடுத்து வாருங்கள். இந்த மருந்தைக் கொடுக்க ஆரம்பித்த 15-வது நாளிலேயே நல்ல நிவாரணம் கிடைப்பதை உணர்வீர்கள். ஒரு மண்டலம் முழுமையாக எடுத்து முடிக்கும்போது, இந்தப் பிரச்னை மீண்டும் தொடராமல் இருக்கும். இந்தப் பிரச்னையை ஆரம்பத்திலேயே கவனிப்பது சரியானது.
வைரஸ் தொற்று போன்ற எந்தத் தொற்று பாதித்தாலும் இந்தப் பிரச்னை வரலாம். கபத்தின் ஆதிக்கம் அதிகரிப்பதாக அர்த்தம். வயிற்றில் மந்தத் தன்மையும் அதிகரிக்கும். இந்த இரண்டும் இருக்கும்போது நோய் எதிர்ப்பாற்றல் வெகுவாகக் குறையும். அடிக்கடி சளி, காய்ச்சல் வரும். கன்னப்பகுதிகளில் நீர்கோத்துக்கொண்டு, சைனஸ் பிரச்னையும் சேர்ந்துகொள்ளும். சைனஸ் பாதிப்பு வரப்போவதற்கான முதல் அறிகுறி இது. எனவே, ஆரம்ப நிலையிலேயே இந்த மருந்தைக் கொடுத்துவிட்டால் அடுத்தகட்டத்துக்குப் போகாமல் நல்ல நிவாரணம் தெரியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.