பயிற்சி ஆட்டத்தில் ராகுலுக்கு காயம்! கோலி காயத்தால் ஸ்கேன் செய்ய சென்றாரா?
Doctor Vikatan: 10 வயது சிறுவனுக்கு அடிக்கடி சளி, இருமல்... சித்த மருத்துவம் உதவுமா?
Doctor Vikatan: என் 10 வயது மகனுக்கு அடிக்கடி சளி, இருமல் வருகிறது. ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் காட்டி, மாத்திரைகள் கொடுக்கிறோம். ஆனாலும் நிரந்தர தீர்வு இல்லை. சளி, இருமல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கொடுக்க சித்த மருத்துவத்தில் வழிகள் இருந்தால் சொல்லவும்.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி
நோய் வாய்ப்படும்போது மருத்துவரைப் பார்த்து மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வது மட்டும் சரியான விஷயமல்ல. குழந்தை அடிக்கடி நோய் வாய்ப்படுகிறான் என்றால் முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.
குழந்தைகளின் உடல்நல பாதிப்புக்கு நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதது முக்கிய காரணம் என்றாலும் அதை மீறிய வேறு காரணங்களும் இருக்கக்கூடும். இந்தப் பிரச்னைக்கு சித்த மருந்துகள் நிச்சயம் உதவும்.
வீட்டிலேயே கற்பூரவள்ளி, துளசி, சித்தரத்தை, அதிமதுரம் போன்றவற்றை சாறு எடுத்து தேன் கலந்து கொடுக்கலாம். ஆனால் இதையெல்லாம் தினமும் செய்ய முடியாது, குழந்தையின் நோய் எதிர்ப்பாற்றல் மிக மோசமாக இருக்கிறது என்ற நிலையில் மருத்துவ ஆலோசனையுடன் லேகியம் உள்ளிட்ட மருந்துகளைக் கொடுக்கலாம்.
தகுந்த சித்த மருத்துவரை அணுகி, காரணம் அறிந்து அவர் பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.
உங்கள் மகனுக்கு டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச்சதை வீக்க பிரச்னை உள்ளதா என்றும் பாருங்கள். அப்படி இருந்தால் அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து தனித்தனியே பொடித்துக்கொள்ளவும். ஒவ்வொன்றிலும் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, அத்துடன் துளசி இலைகள் 10, கற்பூரவள்ளி இலைகள் 5 ஆகிய எல்லாவற்றையும் சிறிது ஆடாதொடை இலைச்சாறு விட்டு அரைத்துக் கொள்ளவும். கலவையை சின்னச் சின்ன மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி எடுக்கவும். அப்படிக் காயவைக்காவிட்டால் பூசணம் பிடித்துவிடும். காயவைக்க முடியாதவர்கள் சிரப் வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம். மாத்திரையாக எடுப்பதானால் மூன்று வேளைகளுக்குத் தலா ஒன்று, சிரப் என்றால் தேன் கலந்து மூன்று வேளைகளுக்கு தலா ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். இதை எடுத்துக்கொள்வதோடு, குழந்தையை தினமும் வெந்நீரில் கல் உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து வாய் கொப்புளிக்கச் சொல்லவும்.
கூடவே மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுக்கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மருந்துகள் முழுமையாக வேலை செய்யும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.