டேஹ்ராடூன் கோர விபத்து: விருந்து, அதிவேகம், நொறுங்கிய கார்: 6 பேர் பலி
Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் (Frozen Shoulder) பாதிப்பு... இரண்டு கைகளிலும் மாறி மாறி வருமா?
Doctor Vikatan: எனக்கு ஒரு வருடத்துக்கு முன்பு இடப்பக்கத்தில் ஃப்ரோஸன் ஷோல்டர் (Frozen Shoulder) பாதிப்பு வந்தது. இப்போதுதான் அது குறைய ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வலது பக்க கையில் அதே வலி ஆரம்பித்திருக்கிறது. ஃப்ரோஸன் ஷோல்டர் பிரச்னை இப்படி இரு கைகளிலும் மாற்றி மாற்றி வருமா?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.
ஃப்ரோஸன் ஷோல்டர் (Frozen Shoulder) என்ற பிரச்னை எந்த அளவுக்கு தோள்பட்டை மூட்டுகள் சார்ந்ததோ, அதே அளவுக்கு ரத்தச் சர்க்கரை அளவு, வீக்கம் போன்ற பொதுவான உடல்நல பாதிப்புகளையும் சார்ந்தது. எனவே, ஃப்ரோஸன் ஷோல்டர் பாதிப்பு என்பதை வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய பிரச்னையாகவும், மூட்டுகள் தொடர்புடைய பிரச்னையாகவும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதுவே உங்கள் கேள்விக்கான தெளிவைக் கொடுக்கும்.
ரத்தச்சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, தோள் மூட்டுகள் மட்டுமன்றி, உடலின் அனைத்து உறுப்புகளிலும் அழற்சி எனப்படும் இன்ஃப்ளமேஷன் பாதிப்பு நிச்சயம் இருக்கும். இந்த நிலையில் சின்னச் சின்ன உடல் அசைவுகள்கூட வலியை ஏற்படுத்தலாம்.
உதாரணத்துக்கு, பண்டிகை மற்றும் விசேஷ நாள்களில் வீட்டைச் சுத்தப்படுத்தியிருக்கலாம், ஃபேனை துடைத்திருக்கலாம், கொடியிலிருந்து துணிகளை வேகமாக இழுத்து எடுக்க முயற்சி செய்திருக்கலாம், பரணிலிருந்து ஏதோ பொருளை எடுக்க முனைந்திருக்கலாம், கார் ஓட்டும்போது திடீரென பின்பக்கம் திரும்பி கையை கோணலாகத் திருப்பியிருக்கலாம்... இப்படிப் பல விதங்களில் தோள் மூட்டுகள் தினசரி வேலைகளின் போது காயமாகும்.
சர்க்கரைநோய் பாதிப்பு இல்லாதவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டால், இரண்டு, மூன்று நாள்களில் தானாகச் சரியாகிவிடும். அதுவே ரத்தச் சர்க்கரை அதிகரிக்கும்போது, கட்டுப்பாடற்ற நீரிழிவு நிலையில், இந்தப் பிரச்னை, ஃப்ரோஸன் ஷோல்டர் என்ற அடுத்த நிலைக்குப் போகக்கூடும். எனவே, நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு இந்த ஃப்ரோஸன் ஷோல்டர் பாதிப்பானது இரு கைகளிலும் மாறி மாறி வரும் வாய்ப்புகள் மிக அதிகம்.
நீங்கள் உங்கள் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் இதற்கான முதல் தீர்வு. அதற்கான சரியான மருத்துவம், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றில் தீவிரமாக கவனம் செலுத்துங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.