BB Tamil 8 Day 39: காதல் வதந்தியால் வெடித்த சண்டை; தீபக் செய்த தரமான காமெடி சம்பவம்
ஸ்கூல் டாஸ்க்கை வைத்து எத்தனையோ சுவாரசியங்களை நிகழ்த்தியிருக்கலாம். அதிலும் நகைச்சுவையுணர்வு கொண்ட விஷால், முத்து போன்றவர்கள் அடித்து பட்டையைக் கிளப்பியிருக்கலாம். ஆனால் உப்புச்சப்பற்ற எபிசோடாக இது கடந்து போனது. தர்ஷிகா x விஷால் லவ் வதந்தி குறித்தே நேரத்தை இழுத்து விட்டார்கள்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 39
காலை ஏழு மணிக்கு அலாரம் அடித்தது. சின்சியர் சிகாமணியாக இருந்த வாட்ச்மேன் அங்கிள் சட்டென்று எழுந்து கொண்டார். ஆனால் பலரும் தூக்கக் கலக்கத்தில் இருந்தார்கள். நிர்வாகத்திடமிருந்து வந்த சர்க்குலரை தூங்கி வழிந்தபடியே படித்தார் ஜாக். தேர்வுக்காலம் என்பதால் மாணவர்களை சீக்கிரம் எழுப்பிவிட வேண்டுமாம். வார்ம் அப் செய்ய வேண்டுமாம். “அதெல்லாம் எழுந்துக்க முடியாது. முன்னாடியே சொல்லியிருக்கணும்” என்று ராவடி செய்தார் அராத்து சத்யா.
“எந்த இடத்துல பசங்க அசெம்பிள் ஆகணும்.. லிவ்விங் ஏரியாவா, கார்டனா” என்கிற குழப்பம் வர அதை வைத்து சத்யாவும் ராணவ்வும் அலப்பறை செய்தார்கள். இதனால் பொறுமையின் சிகரமாக இருந்த VP சார் டென்ஷன் ஆகி “காலங்கார்த்தால சாகடிக்காதடா..” என்று ராணவ்விடம் வெடித்தெழுந்தார். (அப்ப மத்தியானம் சாகடிக்கலாமா? - இப்படிக்கு விஷால்). “சார். என் கேரக்டரைத்தான் செஞ்சேன்” என்று பம்மினார் ராணவ். என்றாலும் அருணின் கோபம் அடங்கவில்லை. கங்குவா FDFS பார்த்தது போல் டென்ஷன் ஆகி கத்திக் கொண்டிருந்தார்.
மாணவர்களுக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்த PT சார் ஜெப்ரி, சில மாணவர்கள் சேட்டை செய்ததைப் பார்த்து டென்ஷன் ஆகி ‘வெளியே போங்க’ என்று துரத்தி விட்டார். “நீ லிமிட்டுக்குள்ள விளையாடு” என்று ராணவ்விற்கு மீண்டும் மீண்டும் அட்வைஸ் செய்து கொண்டிருந்தார் அருண். இதெல்லாம் சீக்ரெட் டாஸ்க் என்பது பிறகு தெரிய வந்ததும் ‘எல்லாம் நடிப்பா கோப்பால்?’ என்று அருண் நொந்து நூடுல்ஸாகி விடுவார். ஆனால் மற்றவர்களையெல்லாம் விட்டு விட்டு ராணவ்விடம் மட்டும் ஏன் தொடர்ந்து அருண் அட்வைஸ் செய்கிறார் என்று தெரியவில்லை. ஜூனியர் என்கிற இளக்காரமா?!
தீபக் செய்த தரமான காமெடி சம்பவம்
அடுத்த டாஸ்க் சற்று காமெடியாக சென்றது. குறிப்பாக தீபக் செய்த செயல் தரமான சம்பவம். மாணவர்கள் மன்னிப்புக் கடிதம் எழுத வேண்டும். பெறுநரும் விடுநரும் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். யாருக்காக கடிதம் எழுதுகிறேன் என்பதைக் குறிப்பிட்டு கடிதம் எழுதியவரின் பெயரை இறுதியில் இட வேண்டும். இதை தமிழாசிரியை திருத்தித் தருவார்.
முதல் கடிதம், தர்ஷிகாவிற்கு ‘தமிழ் அம்மா’ எழுதியது. ஆனால் இதை எழுதியவர் விஷால். “வணக்கம் தர்ஷூம்மா.. நீ காதல் செய்யறேன்னு பொதுவுல சொல்லி உன்னைக் கஷ்டப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இனிமே சொந்த அம்மா மாதிரி உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து ஜாலியாக டென்ஷன் ஆன மஞ்சரி, “சொந்த அம்மா மாதிரின்னா.. வௌக்குமாத்தை எடுத்துத்தான் துரத்தணும்.. நீ மன்னிப்பு கடிதத்தையும் காதல் கடிதம் மாதிரியே எழுதறே” என்று விஷாலிடம் சொன்னது சுவாரசியமான காட்சி.
அடுத்தடுத்த கடிதங்கள் முழுவதும் பிரின்சிபல் மேடத்தை வைத்து மாணவர்கள் காமெடி செய்து தீர்த்துவிட்டார்கள். “பள்ளியை சரியாக நிர்வகிக்கவில்லை. என் பொறுப்பை உணர்ந்து மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்று பிரின்சிபல் மாணவர்களுக்கு மன்னிப்பு கேட்டு எழுதிய கடிதம். எழுதியவர் ரஞ்சித். இறுதியில் அவர் கையொப்பமிட்ட ஸ்டைல்: ‘இப்படிக்கு ஐபிஎஸ் ஆகத் துடிக்கும் ரஞ்சித்’.
தீபக் எழுதிய கடிதம் ரகளையாக இருந்தது. அந்த சிடு சிடு முகத்திற்குள் இப்படியொரு நகைச்சுவையுணர்வா? “பாரபட்சமாக நடந்து கொண்டதால் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். செய்த தவறை ஈடு கட்டும் விதமாக பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை. நான் VP சாருடன் இன்பச் சுற்றுலா சென்று புதுப்பொலிவுடன் திரும்புவேன்” என்று பிரின்சிபல் மேடம் மாணவர்களுக்கு எழுதியிருந்ததைப் பார்த்து ஒட்டுமொத்த மாணவர்களும் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார்கள்.
ஆசிரியர்கள் நடத்திய கலைநிகழ்ச்சி
அடுத்த கடிதம் தர்ஷிகா எழுதியது. PT சார் விஷாலுக்கு எழுதியதைப் போன்ற கடிதம். “தமிழ் அம்மாவைப் பார்க்க முடியாத காண்டினால் என் தங்கமான விஷாலை நீங்கள் பின்புறத்தில் அடித்ததைக் கண்டு என் மனம் சுக்கு நூறாகி விட்டது. அதனால் என்னை சைக்கிளில் வைத்து விஷால் டபுள்ஸ் அடிக்க முடியாததற்கு காரணமாக இருந்து விட்டீர்கள். (பின்குறிப்பு: அடுத்தவன் காதலை வளர்த்து விட்டால் உங்கள் காதல் வளரும் ஐயா) இப்படிக்கு என் தங்கம் விஷாலுக்காக அவனுடைய தங்கம் தர்ஷிகா’.
இந்த மன்னிப்புக் கடிதம் டாஸ்க் முடிந்ததும் “இதுக்கு இல்லையா மேடம் ஒரு எண்டு.. எப்ப தருவீங்க ஃபனிஷ்மெண்டு” என்று ரியா கேள்வி எழுப்ப “என்னம்மா உன் பிரச்னை. எல்லாத்துக்கும் தண்டனைதான் தீர்வா?” என்று அவருடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் மஞ்சரி.
ஸ்கூல் மீட்டிங். ‘குழந்தைகள் தினம்’ என்பதால் ஆசிரியர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தி குழந்தைகளை மகிழ்விப்பார்களாம். முதலில் எழுந்த பிரின்சிபல் மேடம், பாலகோபாலன்..’ என்று ஆரம்பித்து மனமுருகி பக்தியும் காதலும் கலந்த பாடலைப்பாட அதை ரொமான்ஸ் பார்வையுடன் ரசித்துக் கொண்டிருந்தார் அருண். ஆனால் மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் சிரிப்பை அடக்க முடியாமல் வாய்க்குள் மென்றார்கள்.
அடுத்து வந்த வாட்ச்மேன் அங்கிள் சிவக்குமார், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல் நடித்துக் காண்பித்த நாடகத்தை குழந்தைகள் கண்விரிய பார்த்து ரசித்தார்கள். ‘பாய்ஸ்’ படத்தின் ‘சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ்’ பாடலின் வரிகளை பிக் பாஸிற்காக பொருத்தமாக மாற்றிப் போட்டு பாடினார் மஞ்சரி.
விஷூவும் தர்ஷூவும் லவ்ஸூ் - காதல் வதந்தியால் சண்டை
பாத்ரூம் கண்ணாடியில் ‘விஷூவும் தர்ஷூவும் லவ்ஸூ் என்று லிப்ஸ்டிக்கால் எழுதப்பட்டிருந்தது. இதை ராணவ், பிரின்சிபல் மேடத்திடம் சுட்டிக் காட்ட “நீதான் எழுதினியா?” என்று அவரையே குற்றவாளியாக்க முயன்றார் வர்ஷினி. “இந்த விபி சார் எதுக்கும் பனிஷ்மெண்ட்டே தர மாட்டேங்கறாரு. அதிகாரத்தை எனக்குக் கொடுங்க” என்கிற மாதிரி காண்டானார் ஜெப்ரி.
முத்துவிடம் தனியாக அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார் ஜாக். “என்னை ரொம்ப ஹர்ட் பண்றாங்க.. ரொம்ப வலிக்குது” என்று அவர் அனத்துவது, தீபக் தரும் குடைச்சல்தான். ‘எனக்குத்தான் எல்லாம் தெரியும்’ என்கிற அறிவாளித்தனத்தால் மற்றவர்களை இளக்காரமாகப் பார்க்கும் தீபக்கின் குணம் ஜாக்கின் மனதைப் புண்படுத்தியிருக்கிறது. “இந்த கேம் அப்படித்தான் இருக்கும். நீ திறமையான பிளேயர்’ என்பது மாதிரி சமாதானம் சொல்லிக்கொண்டிருந்தார் முத்து.
பாத்ரூம் கண்ணாடியில் எழுதப்பட்ட காதல் வதந்திக் குறிப்பு பற்றிய விசாரணை ஆரம்பித்தது. வளவள மற்றும் சளசளவென்று நடந்த இந்த உரையாடலில் ஒரு சுவாரசியமும் இல்லை. “பாய்ஸ் கிட்ட லிப்ஸ்டிக் கிடையாது. அன்ஷிதாதான் எங்க கேங்க்ல இருக்கற ஒரே பொண்ணு’ என்று அவரைப் போட்டுக் கொடுத்தார் விஷால்.
‘நான்தான் எழுதினேன்’ என்று வம்படியாக வந்து தீபக் ஆஜர் ஆகியும் யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. “அப்ப என்னைச் சந்தேகப்படறீங்களா..?” என்று அவராகவே கேட்டுக் கொண்டு டென்ஷன் ஆன தர்ஷிகா, வேகமாக ஓடிச் சென்று பாத்ரூமிற்குள் மறைந்தார். எழுபதுகளின் சினிமாக் காட்சிகளில் ஹீரோயினுக்கு ஏதாவது ஒரு துயரம் என்றால் ஓடிச் சென்று அழுதபடி படுக்கையில் ‘பொத்’ என்று விழுவார்கள். அந்த மாதிரி பிக் பாஸில் பாத்ரூம் ஏரியா போலிருக்கிறது.
விசாரணையின் போது பிரின்சிபல் மேடம் வார்த்தைகளை விட்டதால் ‘அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று ‘காதலுக்கு எதிரி பிரிவு’ மாணவர்கள் முட்டி போடும் போராட்டம் நடத்தினார்கள். “நான் எழுதலை. அதனால நானும் முட்டி போடறேன்” என்று இணைந்தார் அன்ஷிதா. சவுந்தர்யாவும் அவருடன் இணைந்து கொண்டார். ‘Cheap, immature-ன்னு மேம் திட்டினதுக்கு மட்டும் கோபம் வருதுல்ல. அப்ப யாருன்னு ஒத்துக்கங்களேன்’ என்பது சவுந்தர்யாவின் ஆட்சேபம். “நானும் முட்டி போடறேன். அப்பவாவது உண்மை வெளிய வருதான்னு பார்க்கலாம்” என்று மஞ்சரி டீச்சரும் அஹிம்சை வழியில் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டார்.
டீச்சரே முட்டி போட்டதால் மாணவர்கள் சங்கடம் அடைந்தார்கள். ‘நான்தான் எழுதினேன்’ என்று விஷால் சொல்ல, ‘நான்தான் எழுதினேன்.. நான்தான் எழுதினேன்..’ என்று ரிப்பீட் மோடில் கத்திக் கொண்டே வந்தார் தர்ஷிகா. (இது அன்ஷிதாவோட காப்பிரைட் ஆச்சே?!) பிரின்சிபல் மேடமும் வெளியே வந்து மாணவர்களிடம் மிகையாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்டார். “நான் எவ்வளவு டீசன்ட்டா ஒத்துக்கறேன். அந்த மாதிரி நீங்களும் ஏன் செஞ்ச தப்பை ஒத்துக்கக்கூடாது?” என்று வெள்ளந்தியாக கேள்வியும் கேட்டார்.
‘குத்தினா கத்துவேன்.. கத்தினா குத்துவேன்- அருண் Vs ஜாக் சண்டை
“ஓகே.. ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுங்க” என்று தர்ஷிகாவிடம் அருண் சொல்ல “சார்.. தண்டனை கொடுக்கற பொறுப்பை பிடி சாரிடம் தரலாம்” என்று உள்ளே புகுந்தார் ஜாக்குலின். அப்போது ஆரம்பித்தது வினை. இரண்டு பேரும் நீண்ட நேரத்திற்கு வாக்குவாதம் செய்தார்கள். “என்னைப் பேசவே விட மாட்டேன்றாரு.. நான் போறேன்” என்று ஜாக் வெளிநடப்பு செய்ய “அவங்க பாட்டுக்கு பேசிட்டே இருப்பாங்க.. நாம பார்த்துட்டு இருக்கணுமா?” என்று விடாமல் மல்லுக்கட்டினார் அருண்.
“இந்தப் பிரச்னை எல்லோரையும் தாண்டி பிரின்சிபல் டேபிளுக்கு வந்துடுச்சு. இப்ப நாமதான் முடிவெடுக்கணும்.. பிடி சாரை விட்டு தண்டனை கொடுக்கணும்னு ஜாக் சொல்றது சரியில்லை. அவர் என்ன தண்டனை கொடுக்கற ஆளா?” என்று அருண் சொல்வது சரியான விவாதம். ஆனால் இது ‘டிசிப்ளனரி ஆக்ஷன் பிரிவுல வராது’ என்று சொல்வது அபத்தம்.
‘எங்க போனாலும் என்னை மதிக்க மாட்றாங்க’ என்கிற கோபத்தில் இருந்த ஜாக், தன்னுடைய வேலையை ரிசைன் செய்யும் விதமாக ஐடி கார்டை கழற்றிப் போட்டார். “நீங்களே முடிவு பண்றதா இருந்தா, எங்களை ஏன் டிஸ்கஷனுக்கு கூப்பிடறீங்க?” என்பது அவரது கோபம். பிடி சாருக்காக ஜாக்குலின் வாதாட, சம்பந்தப்பட்ட பி.டி சாரோ எதையும் பேசாமல் வேடிக்கை பார்த்தார் என்பதுதான் வேடிக்கை.
“நான் கிளாஸ் நடத்தும் போது ஏன் வர்றீங்க?” என்று அருணிடம் கேட்டதின் மூலம் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்டார் ஜாக். “நீங்க ஒழுங்கா மாரல் கிளாஸ் எடுக்கறீங்களான்னு பார்க்க வேண்டியது என் பொறுப்பு. ஆனா நீங்க மாரல்ன்ற பேர்ல ஒவ்வொரு மாணவரையும் பத்தி தப்பா பேசறீங்க?” என்று கிடைத்த கேப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் அருண். ஜாக்கிற்கும் தீபக்கிற்கும் ஆகாது என்பதால் அந்தக் கதையை இழுத்த அருண் “ஒரு ஸ்டூண்ட்டை வெச்சு குரங்கு -ன்னு கதை சொல்றாங்க.. இதெல்லாம் மாரலா?.. தனிப்பட்ட தாக்குதலா தெரியுது” என்று போட்டுக் கொடுக்க ஜாக் டென்ஷன் ஆனார்.
“நான் சொன்ன கதைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. அவர்தான் என்னை தொடர்ந்து நோண்டிட்டு இருக்கார். தீபக்கைக் கூப்பிடுங்க.. நான் சொன்னது அவருக்குத் தப்பா தெரிஞ்சா மன்னிப்பு கேட்கறேன்” என்றார் ஜாக். ஆக ஜாக்குலின் மனதிற்குள் தீபக் விவகாரம் முள் போல உறுத்திக் கொண்டே இருக்கிறது. எப்படியாவது அதை முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்.
தீபக் வர “நான் சொன்ன கதை சிலபஸ் படிதான். உங்களுக்கு தப்பா தெரிஞ்சா மன்னிப்பு கேட்டுக்கறேன்” என்று காலில் விழும்படியான பாவனையுடன் செய்து விட்டு உடனே ஓடிச் சென்று பாத்ரூமில் புகுந்து கொண்டார் ஜாக்குலின். “அவங்க தப்பா சொல்லலைன்னா ஓகே… ஆனா சொன்ன விதம் தப்பாதான் இருந்தது” என்று ஜாக்கின் பாடி லேங்வேஜை வேடிக்கையாக செய்து காண்பித்தார் தீபக்.
சலிப்பாக நடந்த ரேங்கிங் வரிசை
தனது ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு தீபக் பலரையும் மட்டம் தட்டுகிறார் என்பது உண்மைதான். அதில் மாட்டிக் கொண்டவர்களில் ஜாக்குலினும் ஒருவர். பதிலுக்கு ஜாக்குலினும் ‘குரங்கு கதை’ சொல்லி பழி தீர்த்துக் கொண்டார். எனில் எதற்காக இப்படி அழுது விக்டிம் கார்டாக பிளே செய்ய வேண்டும்? “அவங்க எப்பவும்மேலயேதான் இருப்பாங்க..நாம எப்பவும் மட்டம்தானா?” என்று பெண்ணியக்குரலில் ஜாக் புலம்பி அழ “இது மேல் ஈகோ” என்று மற்ற பெண்கள் சமாதானம் செய்தார்கள்.
ஒழுக்கமான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் ரேங்கிங் வரிசை நடந்தது. இதுவும் நீண்ட நேரத்திற்கு நடந்து சலிப்பை ஏற்படுத்தியது. ஆசிரியர்களின் வாக்கெடுப்பில் முதல் பரிசு முத்துவிற்கும் இரண்டாவது பரிசு சாச்சனாவிற்கும் மூன்றாவது ரயானுக்கும் தரப்பட்டது. 4, 5, 6-வது இடங்கள் முறையே ஆனந்தி, ரஞ்சித், அன்ஷிதா ஆகியோருக்கு தரப்பட்டன. இடையில் தீபக்கிற்கு ஒரு இடத்தை ஜாக்குலின் பரிந்துரை செய்ததின் மூலம் சமாதானக் கொடியை பறக்க விட முயன்றார்.
கடைசியாக வரும் மூன்று நபர்கள் இம்போஷிசன் தண்டனையை ஏற்க வேண்டும். அதன்படி ரியா, சத்யா, ராணவ் கடைசியாக வந்தார்கள். “என்னால் இதை ஏற்க முடியாது” என்று சண்டை போட்டார் ரியா. பிறகு பிக் பாஸ் லோகோ காட்டப்பட்டதும் “ஓ… அவரு சொல்லிட்டாரா.. அப்ப சரி” என்று ஏற்றுக் கொண்டார். “காக்கா பிடிச்சே.. ரயான் மூன்றாவது பரிசு வாங்கிட்டான்” என்று பிறகு சத்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ரியா.
‘இந்த ஸ்கூல் டாஸ்க் இத்துடன் நிறைவு பெறுகிறது’ என்று சொன்னதும் போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்தார்களோ, இல்லையோ.. நமக்குத்தான் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. ஸ்கூல் டாஸ்க்கை இத்தனை திராபையாக கையாண்ட சீசன் இது மட்டுமே.