Miss Universe: மிஸ் யுனிவர்ஸ் 2024 கிரீடம் சூட்டிய டென்மார்க் அழகி... விக்டோரியா கேஜெர் தியல்விக்!
மெக்சிகோவில் நடைபெற்ற 73 வது பிரபஞ்ச அழகி போட்டியில், 2024 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை 21 வயதான டென்மார்க்கின் விக்டோரியா கேஜெர் தியல்விக் வென்றார். இதன் மூலம், டென்மார்க்கின் முதல் பிரபஞ்ச அழகி பட்டத்தை பெற்றவர் என்ற பெருமையை பெற்றார்.
மெக்சிகோவின் மரியா பெர்னாண்டா 2 -ம் இடத்தையும், நைஜீரியாவின் சினிடிம்மா அடெட்சினா 3 -ம் இடத்தையும் பிடித்தனர்.
21 வயதான விக்டோரியா டென்மார்க்கில் பிறந்தவர். வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் துறையில் பட்டம் பெற்றவர். இது மட்டும் அல்லாது, இவர் டேனிஷ் தொழிலதிபர், நடன கலைஞர் மற்றும் மிஸ் டென்மார்க் ஆவார். 2022 ஆம் ஆண்டில் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனலில் முதல் 20 இடங்களைப் பிடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பொம்மையை ஒத்திருப்பதற்காக 'மனித பார்பி' என்ற செல்ல பெயரையும் ரசிகர்களிடத்தில் பெற்றார்.
இறுதிச்சுற்றின்போது முதல் ஐந்து போட்டியாளர்களிடமும், “மிஸ் யூனிவர்ஸ் பல தலைமுறை பெண்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. இப்போது உங்களை பார்க்கும் பெண்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்கிறீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு தியல்விக், "நீங்கள் எங்கிருந்து வந்தாலும், உங்கள் கடந்த காலம் எதுவாக இருந்தாலும், அதை உங்கள் பலமாக மாற்றுங்கள். நீங்கள் யார் என்பதை அது ஒருபோதும் வரையறுக்காது. நான் இன்று இங்கு நிற்கிறேன். ஏனென்றால் நான் வரலாற்றை உருவாக்க விரும்புகிறேன். எனவே, உங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்களையும் உங்கள் கனவுகளையும் நம்புங்கள். நீங்கள் தொடர்ந்து போராட வேண்டும். அதுவே உங்களை வழிநடத்தும்" என்று பதிலளித்தார்.
நடுவர்களிடம் அடையாளத்தை பெற்ற கேஜெரின் பிரமிக்க வைக்கும் செயல்திறன் மற்றும் உறுதியான பதில்கள் அவருக்கு பட்டத்தை பெற்றுத்தந்தது.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் ரியாசிங்காவும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் கட்ட சுற்றுகளில் தனது நேர்த்தியை வெளிப்படுத்திய போதிலும் சிங்காவால் முதல் 12 இடங்களில் தேர்வாக முடியவில்லை. குஜராத்தை சேர்ந்த சிங்கா மிஸ் டீன் எர்த் 2023, திவானின் மிஸ் டீன் குஜராத் பட்டங்களை பெற்றவர். 19 வயதிலேயே மிஸ் இந்தியா பட்டத்தை பெற்று வரலாற்றில் இடம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.