சேலம்: உருட்டு கட்டையால் காரை அடித்து நொறுக்கும் அதிமுக பிரமுகர்... வைரலான வீடியோ.. என்ன நடந்தது?
சேலம் மாவட்டம், காரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முக மூர்த்தி. இவர் தன்னுடைய நிலத்தை அடமானமாக வைத்து கந்துவட்டிக்கு கோவையை சேர்ந்த சுஜய் எனும் ஃபைனான்சியரிடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் பெற்ற சண்முக மூர்த்தி முறையாக கடனுக்கான வட்டியை செலுத்தாததால் அவருடைய நிலத்தை எழுதித் தருமாறு மிரட்டி உள்ளனர். சண்முக மூர்த்தி போதிய அவகாசம் கேட்டும் கொடுக்காமல் நேற்று மாலை சேலம் அதிமுக ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜா தலைமையிலான அடியாள்கள் சண்முக மூர்த்தியின் வீட்டில் புகுந்து அடாவடி செய்துள்ளனர்.
மேலும் சண்முகமூர்த்தி தனது நிலத்திற்கு வந்த போது, அவரை அடிக்க முயன்றதால் பயத்தில் காருக்குள்ளேயே இருந்த அவரை காரை கீழே கவிழ்த்தி விட முயற்சித்து, தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் ராஜா தரப்பினர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் விசாரித்தபோது, “நேற்று காலை 11.30 மணிக்கே மேச்சேரி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது இன்ஸ்பெக்டர் மகேந்திரன் விசாரணை செய்தார். மேலும் சிவில் கேசில் போலீஸ் தலையிடக்கூடாது நீங்கள் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டார். ஆனால் அவர்கள் ஸ்டேசனில் கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பெயரைச் சொல்லி அவரிடம் பஞ்சாயத்து பேசிக்கொள்கிறோம் என்று ஸ்டேசனில் கூறினார்கள்.
இந்த நிலையில் தான் ராஜா மற்றும் அவரது மனைவி சோபனா மற்றும் 10 -க்கும் மேற்பட்ட அடியாள்கள் வீட்டிற்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மேச்சேரி இன்ஸ்பெக்டருக்கு தகவல் அளித்தும், அவர் திடீர் விடுப்பில் சென்றுவிட்டதாக கூறினார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட எங்களை ஸ்டேசன் லாக்கப்பில் உட்கார வைத்ததுடன், அடிதடியில் ஈடுபட்ட ராஜா அவரது ஆள்களை ஸ்டேசன் நாற்காலி கொடுத்து அமரவைத்தனர்” என்றனர்.
இதுதொடர்பாக மேச்சேரி காவல் நிலைய போலீஸாரிடம் பேசியபோது, “ராஜா தரப்பில் 4 பேர் மீதும், சண்முக சுந்தரம் தரப்பில் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.