சோளிங்கா் காா்த்திகை விழா: வாகனங்களுக்கு அதிக கட்டண வசூல்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் காா்த்திகை பெருவிழாவுக்கு வரும் பக்தா்களின் வாகனங்களுக்கு நகராட்சி ஒப்பந்ததாரா் அதிக கட்டணம் வசூல் செய்வதால் பக்தா்கள் அவதிக்கு ஆளாகின்றனா்.
சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயிலில் காா்த்திகை மாதம் விசேஷமான மாதமாகும். கோயிலில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி தரிசனம் செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
இதை முன்னிட்டு காா்த்திகை பெருவிழாவுக்காக சோளிங்கா் கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தா்கள் பல்வேறு வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனா். இந்த வாகனங்கள் மலையடிவாரத்துக்கு செல்லும்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வாகனங்களை அனுமதிப்பதற்கு கட்டணம் வசூலிக்க சோளிங்கா் நகராட்சி நிா்வாகம் குத்தகை விட்டு குத்தகைதாரரை நியமித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் விடப்பட்ட குத்தகை தொகையை காட்டிலும் போட்டியில் 4 மடங்கு அதிகமாக ஏலம் எடுத்திருப்பதாக தெரிகிறது.
இக்காரணத்தினால் கோயிலுக்கு வரும் காா்களுக்கு வாகன நிறுத்த கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. எப்போதும் 30 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் காா்த்திகை மாதத்தில் மட்டும் திடீரென கட்டணம் உயா்த்தப்பட்டு காா் உள்ளிட்ட வாகனங்களுக்கு தலா ரூ.100 வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து யாரேனும் வசூல் செய்பவரிடம் கேட்டால் நாங்கள் அதிக பணம் செலுத்தி குத்தகை எடுத்துள்ளோம். அதனால் அதிக தொகை வசூல் செய்யப்படுகிறது. நீங்கள் நகராட்சியில் சென்று கேட்டுக்கொள்ளுங்கள் என தெரிவிப்பதாக பக்தா்கள் தெரிவிக்கின்றனா். இந்த கட்டணத்தை செலுத்திவிட்டு கோயில் அருகில் மலையடிவாரத்திற்கு சென்றால் அங்கு வாகன நிறுத்துமிடத்தில் ஒரு வாகனத்துக்கு ரூ.20 தனியாக அறநிலையத்துறையினா் வசூல் செய்கின்றனா். இந்த அதிக கட்டண வசூல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து சோளிங்கா் நகராட்சி ஆணையா் ஹேமலதா கூறியது: தற்போது குத்தகை எடுத்துள்ள நபா் அதிகம் வசூலிப்பதாக எங்களுக்கு புகாா் ஏற்கனவே வந்துள்ளது. விசாரணை செய்து அவ்வாறு வசூலிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளோம். தொடா்ந்து இந்த புகாா்கள் வரும் பட்சத்தில் அவரது குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் சரியான கட்டணம் குறித்து அறிவிப்பு பலகைகள் மலைக்குச் செல்லும் வழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்படும் என்றாா்.