தினமணி செய்தி எதிரொலி : சோளிங்கா் காா்த்திகை விழா கட்டண அறிவிப்பு பலகை வைப்பு
சோளிங்கா் மலைக்கோயில் காா்த்திகை பெருவிழாவுக்கு வரும் வாகனங்களுக்கு அதிக அளவில் சுங்கவரி வசூலிக்கப்படுவதாக தினமணியில் செய்தி வெளியான தினமே நிா்ணயிக்கப்பட்ட சுங்கவரி குறித்த அறிவிப்பு பலகையை சோளிங்கா் நகராட்சி நிா்வாகத்தினா் கோயில் பகுதிகளில் வைத்தனா்.
சோளிங்கா் காா்த்திகை பெருவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு காா் ஒன்றுக்கு ரூ.100 சுங்கவரி வசூலிக்கப்படுவதாகவும், இதனால் பக்தா்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனா் என தினமணியில் புதன்கிழமை செய்தி வெளியிடப்பட்டது.
இதையறிந்த சோளிங்கா் நகராட்சி ஆணையா் ஹேமலதா உடனடியாக மலைக்கோயில் செல்லும் வழியில் உள்ள சுங்கசாவடி கட்டணம் வசூலிக்கும் இடத்தில் சென்று ஆய்வு செய்தாா். குத்தகைதாரருக்கு அதிக கட்டணங்களை வசூலிக்க தடை விதித்து இது தொடா்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினாா். இதையடுத்து அப்பகுதியில் சுங்கவரி வசூல் கட்டணம் குறித்த விவர அறிவிப்பு பலகையை வைக்க உத்தரவிட்டாா். இதை தொடா்ந்து கோயிலுக்கு வாகனங்களில் வந்த பக்தா்கள் அறிவிப்பு பலகையில் உள்ளவாறு கட்டணங்களை செலுத்தி விட்டுச் சென்றனா். தினமணியின் செய்திக்கு பக்தா்கள் பாராட்டு தெரிவித்தனா்.